ஆன்லைன் பட்டா கோரி 18 குடும்பங்கள் மனு
பொன்னேரி, அரசு வழங்கிய இலவச வீட்டுமனைகளுக்கு ஆன்லைன் பட்டா வழங்காததால், நகராட்சிக்கு வரி செலுத்த முடியாமலும், அரசின் நலத்திட்டங்களை பெற முடியாமலும் தவித்து வருவதாக, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் குண்ணம்மஞ்சேரியை சேர்ந்த 18 குடும்பத்தினர் மனு அளித்தனர். பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட குண்ணம்மஞ்சேரி பகுதியில், ஆரணி ஆற்றின் குறுக்கே, 2017ல் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலத்தின் இணைப்பு சாலைக்காக, அங்கிருந்த 18 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. அங்கு வசித்தவர்களுக்கு, வருவாய்த்துறை வாயிலாக குண்ணம்மஞ்சேரியில் உள்ள அரசு நிலத்தில், வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டன. தற்போது, 18 குடும்பங்கள் வீடு கட்டி வசிக்கின்றனர். இவர்கள், நகராட்சிக்கு வீட்டு வரி செலுத்த சென்றால், 'ஆன்லைன் பட்டா இருந்தால் தான் வசூலிக்க முடியும்' என, நகராட்சி நிர்வாகம் தெரிவிக்கிறது. இதனால், அரசின் பல்வேறு திட்டங்கள் பெற முடியாமல் தவிக்கின்றனர். நேற்று பொன்னேரியில் நடைபெற்ற தமிழக அரசின் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், குடியிருப்பு மக்கள் பங்கேற்று, வருவாய்த் துறையினரிடம் ஆன்லைன் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர்.