சின்ன கடம்பூரில் அமைகிறது 230 கிலோ வாட் துணைமின் நிலையம் தடையில்லா மின்சாரம்:2,000 கிராமங்கள், விவசாயிகள், ரயில்வேக்கும் சப்ளை செய்ய முடிவு
திருத்தணி:திருத்தணி ஒன்றியம் சின்ன கடம்பூரில், 230 கிலோ வாட் துணைமின் நிலையம் அமைப்பதற்கு, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனால், '2,000க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் 110 கிலோ வாட் திறன் கொண்ட ஆறு துணைமின் நிலையங்களுக்கும், ரயில்வே துறைக்கும் மின் வினியோகம் செய்யப்படும்' என, மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். திருவள்ளூர் மாவட்டம், அலமாதி மற்றும் பஞ்செட்டி பகுதிகளில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மோசூர் கிராமத்தில், 400 கிலோ வாட் துணைமின் நிலையத்திற்கு மின்வினியோகம் செய்யப்படுகிறது. அங்கிருந்து அரக்கோணம் சாலை, சோளிங்கர், திருத்தணி, கே.ஜி.கண்டிகை பூனிமாங்காடு, அத்திமாஞ்சேரிபேட்டை உட்பட, 13 ஊர்களில் உள்ள 110 கிலோ வாட் துணைமின் நிலையங்களுக்கு, மின் வினியோகம் செய்யப்படுகிறது. இதில், திருத்தணி வருவாய் கோட்டத்தில், 110 கிலோ வாட் உள்ள ஆறு துணைமின் நிலையங்களில், 23,000 விவசாய கிணறுகளுக்கு, மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இது தவிர, ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், 60க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால், அடிக்கடி குறைந்த மின் அழுத்த பிரச்னை, மின் தடை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் மின் நுகர்வோர் கடும் அவதியடைந்து வந்தனர். இதனால், சுற்றுவட்டார பகுதி தொழிற்சாலைகள் மற்றும் விவசாய நிலங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டது. மின் வெட்டு பிரச்னை உள்ளிட்ட காரணங்களால், மக்கள் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக, வாரியத்திற்கு தொடர்ந்து புகார்களும் வந்தன. இதையடுத்து, திருத் தணியில் 230 கிலோ வாட் துணைமின் நிலையம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டது. இது குறித்து, நான்கு மாதங்களுக்கு முன், திருத்தணி மின் வாரிய கோட்ட செயற்பொறியாளர், திருத்தணி வருவாய் துறையினரிடம் பேச்சு நடத்தினார். ரூ.1.30 கோடி நிலம் அவர் கேட்டு கொண்ட தன்படி, திருத்தணி ஒன்றியம் சின்னகடம்பூர் கிராமத்தில், 230 கிலோவாட் துணைமின் நிலையம் அமைப்பதற்கு, எட்டு ஏக்கர் பாறை புறம்போக்கு நிலத்தை, மாவட்ட நிர்வாகம் மின் வாரியத்திற்கு வழங்கியது. இதற்கு, மின் வாரிய நிர்வாகம் 1.30 கோடி ரூபாய் மாவட்ட நிர்வாகத்திற்கு செலுத்தினால், துணை மின் நிலையம் அமையும் இடத்தை, மின் வாரிய நிர்வாகத்தின் பெயரில் பத்திரப்பதிவு செய்தும், நிர்வாக அனுமதியும் வழங்கப்படும் என தெரிகிறது. அனுமதிக்காக காத்திருப்பு இது குறித்து திருத்தணி மின் வாரிய கோட்ட உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: திருத்தணி, சின்னகடம் பூரில் துணைமின் நிலையம் அமைத்தால், திருத்தணி வருவாய் கோட்டத்தில் உள்ள ஆறு துணைமின் நிலையத்தில், தடையில்லா மின்சாரம் வினியோகம் செய்ய முடியும். மேலும், விவசாயிகளுக்கு கூடுதல் மின் இணைப்பும் வழங்க முடியும். துணைமின் நிலையம் அமைப்பதற்கு, நிலம் கையகப்படுத்தியும் உள்ளோம். துணைமின் நிலையம் அமைய உள்ள இடத்திற்கான ஆவணங்கள் மற்றும் திட்ட மதிப்பீடு தயார் செய்து, சென்னை எழிலகத்தில் இருந்து, அரசின் நிர்வாக அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளன. அரசாணை கிடைத்ததும், ஆறு மாதத்திற்குள் துணைமின் நிலையம் அமைத்து பயன்பாட்டிற்கு விடப்படும். மேலும் இந்த துணைமின் நிலையத்தின் மூலம், கூடுதல் விவசாய மின் இணைப்புகள் மற்றும் ரயில்வே நிர்வாகத்திற்கும் மின் வினியோகம் செய்வதற்கும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். விவசாயிகளுக்கு வரப்பிரசாதம் அரக்கோணம் அடுத்து மோசூர் கிராமத்தில் உள்ள துணைமின் நிலையத்தில் இருந்து, எங்கள் துணைமின் நிலையத்திற்கு மின் வினியோகம் செய்யப்படுவதால் அடிக்கடி குறைந்த அழுத்த மின் பிரச்னை ஏற்படுகிறது. மோட்டார்களை இயக்க முடியாமல் சிரமப்படுகிறோம். மேலும், பகல், இரவு என நான்கு மணி நேரம் மட்டுமே விவசாய கிணறுகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்குவதால், பயிர்களுக்கு குறித்த நேரத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்கு முடியவில்லை. சின்னகடம்பூர் பகுதியில் துணைமின் நிலையம் அமைவது விவசாயிகளுக்கு வரப்பிரசாதம். - ஓய்.வேணுகோபால், திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர்.
என்னென்ன பயன்கள்?
தடையின்றி மின்சாரம் கிடைப்பதால், தொழிற்சாலைகள் அமைக்க உரிமையாளர்கள் முன்வருவர் மோசூரில் இருந்து, 80 கி.மீ.,க்கு மேல் உள்ள துணைமின் நிலையங்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுவதால் ஏற்படும், மின் இழப்புகளை தடுக்க முடியும் மோசூர் துணைமின் நிலையத்தில் பழுது ஏற்பட்டால், இந்த துணைமின் நிலையத்தில் இருந்து மோசூருக்கு மின்வினியோகம் செய்யலாம். மின் இணைப்பு கேட்டு ஆயிரக்கணக்கான விவசாயிகள், பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். அனைவருக்கும் உடனடியாக மின் இணைப்பு வழங்க முடியும் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் கிடைக்கும் திருத்தணி வருவாய் கோட்டத்தில், அடிக்கடி மின் தடை ஏற்படுவதை தடுத்து, முழு நேரமும் மின் வினியோகம் செய்ய முடியும் கனகம்மாசத்திரம் மற்றும் ராமஞ்சேரி பகுதி களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 110 கிலோவாட் துணைமின் நிலையங்களுக்கு எளிதாக மின்வினியோகம் செய்யலாம்.