உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / போலீசார் மீது தாக்குதல் நடத்திய 29 வடமாநில தொழிலாளர்கள் கைது

போலீசார் மீது தாக்குதல் நடத்திய 29 வடமாநில தொழிலாளர்கள் கைது

பொன்னேரி:காட்டுப்பள்ளியில், போலீசார் மீது கற்கள் வீசி தாக்கி வன்முறையில் ஈடுபட்ட, 29 வடமாநில தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் கப்பல் கட்டும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அதன் குடியிருப்பில் வசித்து வந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளி அமரேஷ் பிரசாத் என்பவர், இரு தினங்களுக்கு முன் தவறி விழுந்து உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி சக தொழிலாளர்கள், 500க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை கலைக்க முயன்ற போலீசார் மீது, வடமாநில தொழிலாளர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபட்டனர். இதில், செங்குன்றம் போலீஸ் துணை கமிஷனர் பாலாஜி உட்பட, 10க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர். ஒரு கட்டத்தில் நிலைமை கைமீறி போனதால் போலீசாரும் பதிலுக்கு தாக்குதல் நடத்த கண்ணீர் புகை குண்டு வீசி தடியடி நடத்தி வன்முறையை கட்டுப்படுத்தினர். வன்முறையில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளிகள், 110 பேரை போலீசார் பிடித்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அவர்களில் 29 பேர் மீது எட்டு பிரிவுகளில் காட்டூர் போலீசார் வழக்கு பதிந்தனர். மற்றவர்களை அனுப்பினர். கைதான 29 பேரும், பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, வேலுார் மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி