துணைமின் நிலையம் படுமோசம் அச்சத்தில் 30 கிராமவாசிகள்
கடம்பத்துார், கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி மணவாளநகரில், காஞ்சிபுரம் வட்டம், திருவள்ளூர் கோட்டத்திற்குட்பட்ட துணை மின் நிலையம் அமைந்துள்ளது.கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட இந்த துணை மின் நிலையத்தில் உதவி பொறியாளர், போர்மேன், லைன்மேன், ஒயர்மேன், மின் கணக்கிட்டு பணியாளர் என, 25க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.இந்த மின் நிலையத்தில் இருந்து வெங்கத்தூர், மேல்நல்லாத்தூர், அதிகத்துார், கீழ்நல்லாத்துார் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்த கட்டடத்தில், கடந்த 50 ஆண்டுகளாக எவ்வித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், கட்டடங்கள் முழுதும் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு அபாய நிலையில் உள்ளன.இதனால், புதிய மின் இணைப்பு பெறுதல், மின் கட்டணம் மற்றும் மின் சம்பந்தமான குறைகளை தெரிவிக்க வரும், 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.மேலும், அலுவலகம் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுவதால், விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, பகுதிவாசிகள் மற்றும் மின் ஊழியர்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். மழைக்காலங்களில் கட்டங்களில் மழைநீர் தேங்கி ஒழுகுவதால், அலுவலக பதிவேடுகள் நனைந்து வீணாகி வருகின்றன.எனவே, மணவாளநகர் துணை மின் நிலையத்தை சீரமைத்து, பழுதடைந்து மோசமான நிலையில் உள்ள கட்டடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.