வரி செலுத்தாமல் 300 வணிக நிறுவனங்கள் ...தில்லாலங்கடி: சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் திருத்தணி நகராட்சி
திருத்தணி: திருத்தணியில், 2,000 வீடுகள், ள் நகராட்சிக்கு போக்கு காட்டி வருகின்றன. வருவாய் இழப்பு தொடர்வதால், பல முறை நோட்டீஸ் அளித்தும் அலட்சியம் காட்டி வரும் நிறுவனங்கள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க, நகராட்சி தயாராகி வருகிறது. திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில், 13,887 பேர் சொத்து வரி, 2,743 பேர் காலிமனை வரி, 1,402 பேர் தொழில்வரி, 1,590 பேர் குடிநீர் வரி செலுத்தி வருகின்றனர். நகராட்சி கடைகளுக்கு, 156 பேர் வாடகையும், 13,715 பேர் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு சேவை கட்டணம் செலுத்தி வருகின்றனர். இந்த வகையில், ஆண்டுக்கு, 7.22 கோடி ரூபாய் நகராட்சி வசூலிக்கிறது. இந்த நிதியின் மூலம் நகராட்சி மக்களின் குடிநீர், கால்வாய், மின் விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகள் நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. நகராட்சியில் புதிய வீடுகள் மற்றும் கடைகள் கட்டுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தன. பலர் வீடு, கடைகள் கட்டி, 10 ஆண்டுகள் ஆகியும் நகராட்சிக்கு சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி செலுத்தாமல் உள்ளனர். இதையடுத்து கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் நகராட்சி நிர்வாகம் புதிய வீடுகள் கட்டியவர்கள், ஏற்கனவே கட்டியுள்ள வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் வரி செலுத்தாதவர்கள் குறித்து, வருவாய் ஆய்வாளர் தலைமையில் தனிக்குழு அமைத்து, 21 வார்டுகளிலும் கணக்கெடுத்தனர். இதில், 3,000 வீடுகள் சொத்துவரி, காலிமனை வரி செலுத்தாமல் உள்ளதை கண்டுபிடித்தனர். இதில் ஆயிரம் வீடுகளுக்கு வரி வசூலித்தனர். மீதமுள்ள, 2,000 வீடுகள், 300 வர்த்தக நிறுவனங்களுக்கு புதிய வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணம் மற்றும் காலிமனை வரி வசூலிக்காமல், ஒராண்டுக்கு மேலாக நகராட்சி வருவாய் அலுவலர்கள் மெத்தனமாக செயல் பட்டு வருகின்றனர். இதனால் ஆண்டுக்கு குறைந்த பட்சம், 75 லட்சம் ரூபாய் நகராட்சிக்கு வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, திருத்தணி நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: நகராட்சியில், பெரும்பாலானோர் நகராட்சி அனுமதி பெறாமல் புதிய வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் கட்டி வருகின்றனர். பல ஆண்டுகளாக, புதுவீடுகள் கட்டியவர்கள், காலிமனைக்கு வரி செலுத்தாமல் உள்ளவர்கள் குறித்து கணக்கெடுத்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட் டீஸ் வழங்கி வரி, கட்டணம் செலுத்த அறிவுறுத்தி வருகிறோம். ஆனால், வீட்டு உரிமையாளர்கள், நிறுவனங்கள் வரி செலுத்தாமல் அலட்சியம் காட்டுகின்றன. 85 லட்ச ரூபாய் வரி பாக்கியுள்ளது. சம்பந்தப்பட்டவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி வரி வசூலிக்கப்படும். அடுத்த கட்டமாக, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
ஊழியர்கள் பற்றாக்குறை
நகராட்சியில் வீடுகளுக்கு குறைந்த பட்சம், 300 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை சொத்து வரியும், வணிக வளாகங்களுக்கு குறைந்த பட்சம், 900 ரூபாய் முதல், 4 லட்சம் ரூபாய் வரை, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வரியாக வசூலிக்கப்படுகிறது. அதே போல் காலிமனைக்கு ஒரு சதுரடிக்கு, 40- 80 பைசா வீதம் வரி வசூலிக்கப்படுகிறது. ஆறு மாதத்திற்கு ஒரு முறை வரி வசூலிக்கப்படுகிறது. புதியதாக கணக்கெடுத்து வரி கட்டாத, 2,000 வீடுகள், 300 வர்த்தக நிறுவனங்களுக்கு நகராட்சி ஊழியர்கள் சென்று கட்டாயம் வரி செலுத்த வேண்டும், தவறும் பட்சத்தில் ஜப்தி செய்யப்படும், நீதிமன்ற வழக்கு தொடரப்படும் என உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். ஆனால் இந்த நடவடிக்கை எடுக்க வருவாய் பிரிவில், மூன்று வருவாய் உதவியாளர்கள், பில் கலெக்டர் பணியிடம் காலியாக உள்ளதால் எங்களால், வரி வசூலில் கவனம் செலுத்த முடியவில்லை என நகராட்சி நிர்வாகம் சமாளிக்கிறது.