236 சத்துணவு மைய உதவியாளர் பணிக்கு 3,669 பேர் விண்ணப்பம்
திருவள்ளூர், திருவள்ளுர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில், காலியாக உள்ள 236 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன.சமையல் உதவியாளராக பணி நியமனம் செய்யப்படுவோருக்கு தொகுப்பூதியம் வழங்கப்படும். ஓராண்டுக்கு பின், சிறப்பு கால முறை ஊதியம் வழங்கப்படும்.இப்பணிக்கு, 21 - 40 வயதுடைய பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்கள், ஆவடி மாநகராட்சி மற்றும் ஐந்து நகராட்சிகளில் விண்ணப்பம் பெறப்பட்டது.மாவட்டம் முழுதும் காலியாக உள்ள 236 பணியிடங்களுக்கு, 3,669 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அப்பணி முடிந்ததும், தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்விற்கு அழைக்கப்படுவர்.அப்போது, விண்ணப்பதாரர்களின் அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பின், தகுதி வாய்ந்த பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.