மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் 70 நாட்கள் ஆகியும் தீர்வு இல்லை
திருவாலங்காடு:தமிழகத்தில் மக்கள் தினசரி அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் அவர்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் சென்று சேரும் வகையில், 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 2023 டிச., 18-ம் தேதி துவங்கி வைத்தார். அதன்படி, 15 அரசுத் துறைகளின் 44 சேவைகளுக்கு மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படுகின்றன.இம்முகாம் மாவட்டம் வாரியாக நடக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஒன்றியம் வாரியாக ஜூலை மற்றும் ஆக., மாதத்தில் நடந்தது. திருவாலங்காடு ஒன்றியத்தில் சின்னம்மாபேட்டை, கனகம்மாசத்திரம், பூனிமாங்காடு, மற்றும் திருவாலங்காடு ஆகிய நான்கு ஊராட்சியில் சிறப்பு முகாம் கடந்த, ஜூலை 24ம் தேதி துவங்கி 30 வரை நடந்தது.இதில் திருவாலங்காடு ஒன்றியத்திற்குட்பட்ட, 42 கிராம ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து நேரில் மனு அளித்தனர். ஊரக வளர்ச்சி, மின்சாரம், வருவாய் உட்பட 15க்கும் மேற்பட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள், மக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றனர்.இந்நிலையில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி, மின்துறை என 15 துறைகளிடம் அளித்த மனுக்கள் அந்தந்த அலுவலகத்தில் தேங்கியுள்ளது.இந்த முகாம்களில் இணையதள கோளாறு காரணமாக முறையாக பதிவு செய்யவோ மனுவிற்கான அத்தாட்சி ரசீது வழங்கவோ இல்லை. தற்போது கோரிக்கை மனு குறித்து விசாரிக்க சம்பந்தப்பட்ட அலுவலகம் சென்றால் யாரிடம் மனு அளித்தீர்கள், எப்போது மனு அளித்தீர்கள் என சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் கேட்பதாக மனு அளித்தவர்கள் புலம்புகின்றனர்.இதனால், முதல்வர் திட்ட முகாமில் மனு கொடுத்தால் உடனடி தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், மனு கொடுத்த மக்கள், 70 நாட்களுக்கு மேல் ஆகும் நிலையில் யாரிடம் முறையிடுவது என தெரியாமல், தவித்து வருகின்றனர்.இதுகுறித்து வருவாய் துறையிடம் மனு அளித்த முதியவர் ஒருவர் கூறியதாவது : சின்னம்மாபேட்டையில் நடந்த முகாமில் பட்டா மாறுதல் வேண்டி மனு அளித்திருந்தேன். திருத்தணி தாலுகா அலுவலகம் சென்று கேட்டால், எங்கே மனு அளித்தீர்கள் இங்கு தகவல் இல்லை. வி.ஏ.ஓ., வை சென்று பாருங்கள் என விரட்டுகின்றனர்.உயரதிகாரியை அணுகினால் மனு அளித்த ஆதாரம் கேட்கின்றனர். மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மக்களிடம் இருந்து பெற்ற மனுக்கள் கண்துடைப்பா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.