பழுதான வேளாண்மை கிடங்கு கட்டடம் மழையில் நனைந்து வீணாகும் உர மூட்டை
திருத்தணி:திருத்தணி ஒன்றிய அலுவலகம் பின்புறத்தில், வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் மூலம் ஒன்றிய விவசாயிகளுக்கு விதை நெல், வேர்கடலை, பயிறு வகை மற்றும் உரங்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதற்காக விதைகள் இருப்பு வைப்பதற்கு ஒரு கட்டடமும், உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் இருப்பு வைப்பதற்கு மற்றொரு கட்டடம் என இரண்டு கட்டடங்கள் உள்ளன. இந்த கட்டடங்களை முறையாக பராமரிக்காததால் தற்போது கட்டடத்தின் மேல்தளம் சேதம் அடைந்துள்ளது.இதனால் மழை பெய்யும் போது மழைநீர் ஒழுகி கிடங்கு முழுதும் தண்ணீர் தேங்கி நிற்பதுடன், உயிர் மற்றும் விதைநெல் மழையில் நனைந்து வீணாகிறது. இது தவிர கட்டடத்தில் செடிகள் வளர்ந்தும் விரிசலும் அடைந்துள்ளது.எனவே பழுதடைந்த வேளாண்மை கிடங்கு கட்டடங்களை சீரமைக்க வேண்டும் அல்லது அகற்றி அதே இடத்தில் புதிய கட்டடம் கட்டித் தரவேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.