பாலாபுரத்தில் பழுதடைந்த நிழற்குடை
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தின் மேற்கில், ஆந்திர மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளது பாலாபுரம் கிராமம். இந்த கிராமத்தை ஒட்டியுள்ள பகுதிக்கு போக்குவரத்து வசதி குறைவு.இந்த பகுதியில் உள்ளவர்கள் அவசர மருத்துவ சிகிச்சைக்காக அம்மையார்குப்பம் அல்லது சோளிங்கர் அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஐந்து ஆண்டுகளுக்கு முன், பாலாபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் துவங்கப்பட்டது.இந்த மருத்துவமனையில் அடிப்படை மருத்துவ வசதிகளுடன் பிரசவ விடுதியும் செயல்பட்டு வருகிறது. இதனால், இந்த பகுதியில் உள்ளவர்கள் எளிதாக மருத்துவ சிகிச்சை பெற முடிகிறது.இந்நிலையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே உள்ள பயணியர் நிழற்குடை நீண்டகாலமாக சீரமைக்கப்படாத நிலையில் உள்ளது. சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து பாலாபுரம் அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள், இந்த நிழற்குடையில் காத்திருந்து தான் பயணிக்கின்றனர்.பயணியரின் பாதுகாப்பு கருதி, இந்த நிழற்குடையை புதுப்பிக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.