உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தரைப்பாலத்தில் திடீர் பள்ளம் வாகன ஓட்டிகள் திக்... திக்...

தரைப்பாலத்தில் திடீர் பள்ளம் வாகன ஓட்டிகள் திக்... திக்...

திருவாலங்காடு: சின்னம்மாபேட்டையில் உள்ள தரைப்பாலத்தில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டது சின்னம்மாபேட்டை கிராமம். இங்கிருந்து, வியாசபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் ஓடை கால்வாய் உள்ளது. இக்கால்வாயை கடக்க, 2020ல், 50 மீ., நீளம், 20 அடி அகலத்தில், நெடுஞ்சாலை துறை சார்பில் தரைப்பாலம் அமைக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தரைப்பாலத்தின் பாதுகாப்பிற்காக பக்கவாட்டில் கொட்டி அணைக்கப்பட்ட மண் அரித்து செல்லப்பட்டதால், தரைப்பாலத்தின் மையப் பகுதியில் நேற்று திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதனால், வியாசபுரத்தில் இருந்து சின்னம்மாபேட்டைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். இதுகுறித்து, சின்னம்மாபேட்டை மக்கள் கூறியதாவது: அரக்கோணம், திருவள்ளூர், திருவாலங்காடு பகுதிகளில் செயல்படும் தனியார் பள்ளிகளில், சின்னம்மாபேட்டை, அரிசந்திராபுரம், தொழுதாவூர் கிராமங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல தனியார் பள்ளி பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு செல்லும் பேருந்துகள், இத்தரைப்பாலம் வழியாகவே சென்று வருகின்றன. இந்த தரைப்பாலத்தை தரமாக சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து திருத்தணி மாநில நெடுஞ்சாலை துறை பொறியாளர் கூறுகையில், 'ஓடை தரைப்பாலத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பள்ளத்தை விரைந்து சீரமைக்க அறிவுறுத்தியுள்ளோம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ