உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / முறைகேடு! குளம் வெட்டும் பணியில் பொக்லைன் இயந்திரம்; 100 நாள் பணியாளர்கள் சம்பளம் ஆட்டை

முறைகேடு! குளம் வெட்டும் பணியில் பொக்லைன் இயந்திரம்; 100 நாள் பணியாளர்கள் சம்பளம் ஆட்டை

திருவள்ளூர் மாவட்டம் காவேரிராஜபுரம் கிராமத்தில், ஊரக வளர்ச்சி துறை வாயிலாக புதிதாக குளம் வெட்டும் பணியை, 100 நாள் பணியாளர்கள் செய்யாமல், பொக்லைன் இயந்திரம் வாயிலாக நடந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை வாயிலாக 100 நாள் பணியாளரை கொண்டு நடை பெறும் பல்வேறு பணிகளும் இதுபோன்று நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மாவட்டத்தில் பள்ளிப்பட்டு, திருத்தணி, திருவாலங்காடு, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி உட்பட 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகள் உள்ளன. மாவட்டம் முழுதும் உள்ள ஊராட்சிகளில் நீர் வளத்தை பெருக்கும் வகையில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் குளம் அமைக்க திட்டமிடப்பட்டது.

அலட்சியம்

அதன்படி 30 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலத்தில், 900 சதுர மீட்டர் அளவில் 5அடி ஆழத்திற்கு குளம் அமைக்கப்பட வேண்டும். இதற்காக மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதி 8 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதன்படி மாவட்டம் முழுதும் உள்ள 526 ஊராட்சிகளுக்கு 42 கோடியே 60 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இப்பணியை, 100 நாள் பணியாளர்களை கொண்டு செய்ய வேண்டும்.ஆனால், திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட காவேரிராஜபுரம் ஊராட்சியில் குளம் வெட்டும் பணி நடந்தது. இப்பணி பொக்லைன் இயந்திரம் வாயிலாக செய்யப்பட்டது. இதனால் 100 நாள் பணிக்கு வந்த, 150க்கும் மேற்பட்டோர் பணிக்கு வந்துள்ளதை போன்று பணி நடை பெறும் இடத்திற்கு வந்து பம்மாத்து காட்டினர்.அரசு, ஏழைகள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற நோக்கில் 100நாள் பணியை வழங்கினால் ஊராட்சி நிர்வாகம் மற்றும் பி.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் அதனை அலட்சியமாக கையாள்வதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

நடவடிக்கை

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: நீர்நிலைகள் ஆழப்படுத்த, வரத்துக் கால்வாய், போக்குக் கால்வாய்கள் துார்வாருதல், போன்ற பல்வேறு பணிகளை செய்ய 100 நாள் பணியாளர்கள் பயன்படுத்தப்படும் நிலையில், பெரும்பாலான கிராமங்களில் அதனை 100 நாள் பணியாளர்கள் செய்யாமல் இயந்திரம் வாயிலாக செய்யப்படுகிறது. புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டிய பி.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் கண்டுக்கொள்வதில்லை. பொக்லைன் இயந்திரத்தால் பணி செய்து, 100நாள் பணியாளர் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி வைத்ததும், பணி தள பொறுப்பாளர் வாயிலாக பணத்தை பெறும் ஊராட்சி நிர்வாகிகள் இயந்திரம் வாயிலாக பணி நடந்ததற்கு குறைந்த பணம் வழங்கி விட்டு மீத பணத்தை விழுங்கி விடுகின்றனர்.100 நாள் பணியாளர்கள் குளம் வெட்டும் பணியில், தினமும் 100 பேர் ஈடுபட்டால் 30,000 ரூபாய் ஊதியமாக வழங்க வேண்டும்.

விசாரணை

பணியை முடிக்க 20 முதல் 25 நாட்கள் ஆகும். பொக்லைன் இயந்திரம் வாயிலாக மூன்று நாட்களில் முழு குளம் வெட்டும் பணியையும் முடித்து விடலாம். இதை பயன்படுத்தி ஊராட்சி நிர்வாகிகள் பணத்தை கொள்ளையடிக்கின்றனர். விரைவில் ஊராட்சி பிரதி நிதிகளின் காலம் முடிவதால் கூடுதல் தைரியத்துடன் செயல்படுகின்றனர்.திருவள்ளூர் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் ஜெயகுமார் கூறுகையில், ' 100 நாள் பணியாளர்களை வைத்து தான் பணி நடக்க வேண்டும். மாறாக பொக்லைன் வாயிலாக பணி நடைப்பெற்றதா, என்பது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.-நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
அக் 22, 2024 20:02

100 நாள் திட்டம் மாதிரியான டுபாக்கூர் திட்டம் உலகிலேயே கிடையாது. இதை வெச்சுக்கிட்டு ஒன்றிய அரசு ஏன் இன்னும் ஏமாத்துதுன்னு தெரியலை. இவிங்களை விட்டு தெருக்களை சுத்தம் பண்ணச் சொல்லலாம். ஆனா, வேலை செய்யாம சம்பள வாங்கும் துப்புரவு பணியாளர்கள் எங்கே போவாய்ங்க? எல்லாம் டுபாக்கூர்தான்.


புதிய வீடியோ