திருத்தணியில் சேதமடைந்த சாலையால் தொடரும் விபத்துகள்
திருத்தணி:திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில், 400க்கும் மேற்பட்ட தெருக்களில், 14 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நகராட்சியில், 110 கோடி ரூபாய் மதிப்பில், கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மேற்கண்ட தெருக்களில் பள்ளம் தோண்டி குடிநீர் குழாய் புதைக்கப்பட்டது.தற்போது, 21 வார்டுகளிலும் குடிநீர் குழாய்கள் புதைக்கும் பணிகள் முடிந்து குடிநீர் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. ஆனால் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நிறைவடைந்தும் சாலையில் தோண்டி பள்ளங்கள் சீரமைக்காததால் வாகன ஓட்டிகள் அடிக்கடி தவறி விழுந்து காயம் அடைகின்றனர். குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் தினமும், பத்துக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். நகராட்சியில் சேதம் அடைந்த சாலைகள் சீரமைக்க வேண்டும் என பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.