ஏரிகளை துார் வாராத நீர்வளத்துறையினர் மீது குற்றச்சாட்டு: நலன் காக்கும் கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசம்
திருத்தணி :திருத்தணியில் நடந்த விவசாயிகள் நலன்காக்கும் கூட்டத்தில், ஏரிகளை துார்வாரி சீரமைக்காமல், நீர்வளத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக, விவசாயிகள் குற்றம்சாட்டினர். திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், பொறுப்பு ஆர்.டி.ஓ., முருகவேல் தலைமையில் நேற்று நடந்தது. நேர்முக உதவியாளர் செந்தில்குமார் வரவேற்றார். கூட்டத்தில் தாசில்தார்கள், வேளாண் உதவி இயக்குநர் உட்பட, அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: வருவாய் கோட்டத்தில், நீர்வளத்துறையினர், 74 ஏரிகளை பராமரித்து வருகின்றனர். கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஏரிகளை துார் வாராமலும், நீர்வரத்து கால்வாயை சீரமைக்காமலும் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். இதனால், பல ஏரிகள் தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. ஏரிப்பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். மாதந்தோறும் நடக்கும் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் ஏரிகள் ஆக்கிரமிப்பு, கால்வாய், மதகு, கரை சேதம் குறித்து விவசாயிகள் புகார் தெரிவித்தும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்படுகின்றனர். இந்த விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் கடமைக்காக நடத்தப்படுகிறதே தவிர, புகார்கள் மீது தீர்வு காண்பதில் அதிகாரிகள் அக்கறை காட்டுவதில்லை. இவ்வாறு அவர்கள் பேசினர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தரையில் படுத்த விவசாயி கூட்டத்தில், நெடும்பரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஸ்ரீதரன் பேசும் போது, “சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், பேருந்து நிறுத்தப்படும் இடங்களில் நிழற்குடை அமைக்காமல் விரிவாக்க பணிகள் நடக்கின்றன. இது குறித்து, பலமுறை சம்பந்தப்பட்ட துறை மற்றும் வருவாய் துறை உயரதிகாரிகளிடம் புகார் தெரிவித்து வருகிறேன். ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உறங்குகின்றனர்,” என்றார். அதன்பின், கூட்டத்தில் இருந்து எழுந்த அவர், திடீரென கூட்ட அரங்கில், 'நானும் உறங்குகிறேன்' என, தரையில் படுத்துக் கொண்டார். உடனே அங்கிருந்த அரசு அலுவலர்கள், விவசாயியை சமரசம் செய்தனர்.