நெடுஞ்சாலையோரம் உயரமான கட்டடங்களில் விளம்பர பேனர்கள்….கட்டுப்படுத்துவது யார்?
திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையோரம் உயரமான கட்டடங்களில் விளம்பர பேனர்கள் அதிகரித்து வருகிறது. இயற்கை சீற்றத்தால் சேதமடையும் விளம்பர பேனர்களால், வாகன ஓட்டிகள் கடும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இவ்வாறு விளம்பரங்கள் வைப்பதை கட்டுப்படுத்துவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை, பள்ளிக்கரணையில் 2019 செப்., மாதம் நெடுஞ்சாலையில் வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில், பைக்கில் சென்ற சுபஸ்ரீ, 23, என்ற இளம்பெண் உயிரிழந்தார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம், நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் விளம்பர பேனர் வைக்க தடை விதித்து.ஆனால், தற்போது நெடுஞ்சாலையோரங்களில் பேனர் வைப்பது, கட்சி கொடிகள் கட்டுவது போன்றவை அதிகரித்து வருகிறது. திருமணம், பிறந்த நாள், நினைவஞ்சலி போன்றவற்றிற்கு கூட நெடுஞ்சாலையோரம் பேனர் வைப்பது தொடர்கிறது.இதை தடுக்க வேண்டிய காவல் துறையினர் கண்டும், காணாமலும் உள்ளனர். உயரமான இடங்களில் வைக்கப்படும் விளம்பர பேனர்கள் இயற்கை சீற்றங்களால் கிழிந்து தொங்கி வருவதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.இவ்வாறு கிழிந்து தொங்கும் விளம்பர பேனர்கள், மின்கம்பிகள் மீது விழுந்து மின்சாரம் துண்டிப்பு ஏற்படுகிறது. தற்போது, நெடுஞ்சாலையோரம் உயரமான பகுதியில் அரசியல் கட்சியினரும், தங்களது கட்சி விளம்பர பேனர்களை வைத்து வருகின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் நெடுஞ்சாலையோரம் உயரமான கட்டடங்கள் மீது பேனர் வைப்பதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 20,000 வாழை மரங்கள் சேதம்
திருவள்ளூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் திடீரென சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால், மேலக்கொண்டையார் பகுதியில், 100 ஏக்கரில் பயிரிடப்பட்ட 90,000 வாழை மரங்களில், 20,000 வாழை மரங்கள் சேதமடைந்தன. ஊத்துக்கோட்டை
ஊத்துக்கோட்டை, தொம்பரம்பேடு, ஆலங்காடு, சிட்ரபாக்கமம், பேரண்டூர் உள்ளிட் பகுதிகளில் 300 ஏக்கருக்கு மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் நெற்பயிர் விதைத்து, தற்போது அறுவடைக்கு தயாராக இருந்தது.மேற்கண்ட கிராமங்களில், நேற்று முன்தினம் மதியம், சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்ததால், வயலில் மழைநீர் தேங்கியது. இதனால், 300க்கும் மேற்பட்ட நெற்பயிர் அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது. கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கம், பூவலை, கண்ணம்பாக்கம், தோக்கமூர், ஈகுவார்பாளையம், ராமசந்திராபுரம் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில், 8,650 ஏக்கர் பரப்பளவில் மாந்தோப்புகள் உள்ளன.நடப்பாண்டில் மாமரங்களில் அதிக அளவிலான காய்கள் காய்த்திருந்தன. அடுத்த மூன்று மாதங்களுக்கு மாம்பழ விளைச்சல் அதிகம் இருக்கும் என்ற மகிழ்ச்சியில் சாகுபடியாளர்கள் இருந்தனர்.இந்நிலையில், பலத்த சூறாவளி காற்றால், மாதர்பாக்கம் சுற்றுவட்டாரத்தில் உள்ள மாந்தோப்புகளில், டன் கணக்கில் மாங்காய்கள் கொட்டியதால், சாகுபடியாளர்கள் சோகத்தில் உள்ளனர்.இதுகுறித்து சாகுபடியாளர் கூறுகையில், 'தத்து பூச்சி தாக்கத்தில் இருந்து மாம்பூக்களை காப்பாற்றியதால், அதிகளவில் மாங்காய் காய்த்திருந்தன. மாம்பழ மகசூலை நம்பி எங்கள் வாழ்வாதாரம் இருந்த நேரத்தில், சூறாவளி காற்றால் பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது.'காப்பீடு செய்யாத சாகுபடியாளர்களுக்கும் உரிய நஷ்டஈடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்தார்.காப்பீடு செய்தவர்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்கப்படும். மாவட்டத்தில் பூண்டி, எல்லாபுரம், ஈக்காடு ஆகிய ஒன்றியங்களில், 13,000 வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து அரசுக்கு தெரிவித்து, உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.தோட்டக்கலை துறை அதிகாரி,திருவள்ளூர்.
நிவாரணம் கேட்கும் விவசாயிகள்
அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சென்னை மண்டல தலைவர் செந்தில்வேலன் வெளியிட்டுள்ள அறிக்கை:திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த 4ம் தேதி பிற்பகல் திடீரென சூறை காற்று மற்றும் கனமழை பெய்தது. இதனால், அறுவடைக்கு தயாராகி வந்த 5,000 ஏக்கர் நெல் பயிர்கள் சாய்ந்து கிடக்கிறது. வாழை, மா, கொய்யா, நெல்லி, கத்தரிக்காய், வெண்டை உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன. நல்ல வருவாய் கிடைக்கும் என, நினைத்திருந்த விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவது உறுதியாகியுள்ளது.இதுகுறித்து திருவள்ளூர் மாவட்டத்தில், வேளாண் துறை வாயிலாக விரைந்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மாநில பேரிடர் மேலாண்மை நிதியில், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.- நமது நிருபர் குழு -