எல்லையோர போலீஸ் நிலையங்களில் இன்ஸ்பெக்டர் இல்லாமல் பாதிப்பு
கும்மிடிப்பூண்டி:சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திர எல்லையை ஒட்டி அமைந்துள்ளது ஆரம்பாக்கம் பகுதி. ஆந்திரா, ஒடிசா, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், பீஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட முக்கிய வடமாநிலங்களில் இருந்து சாலை மார்க்கமாக வரும் அனைத்து வாகனங்களும், ஆரம்பாக்கத்திற்குள் நுழைந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன.கஞ்சா, குட்கா, மணல், செம்மரம், எரிசாராயம் உள்ளிட்டவை மேற்கண்ட வெளி மாநிலங்களில் இருந்து ஆரம்பாக்கம் வழியாக தமிழகத்திற்குள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது. ஆரம்பாக்கம் எல்லைக்கு உட்பட்ட மீனவ கிராமங்கள் வழியாக படகுகள் மூலம் தமிழக ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது.தமிழகத்தின் மிக முக்கியமான நுழைவாயிலாக அமைத்துள்ள ஆரம்பாக்கம் பகுதி கடந்த மூன்று மாத காலமாக, இன்ஸ்பெக்டர் இன்றி உள்ளது. ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டரின் கட்டுப்பாட்டில், மற்றொரு ஆந்திர எல்லையோர போலீஸ் நிலையமான பாதிரிவேடு போலீஸ் நிலையம் உள்ளது.இரு மாநில எல்லையோர போலீஸ் நிலையங்களுக்கான இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படாமல் இருப்பதால், எல்லை பகுதியில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். தமிழக எல்லை பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து, ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் உடனடியாக இன்ஸ்பெக்டரை நியமிக்க மாவட்ட காவல்துறை நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைத்து தரப்பு மக்களும் எதிர்ப்பார்க்கின்றனர்.