உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /   மீண்டும்!பழவேற்காடு ஏரியில் படகு சவாரி

  மீண்டும்!பழவேற்காடு ஏரியில் படகு சவாரி

பழவேற்காடு, பழவேற்காடு ஏரியில், சுற்றுலா பயணியர் படகு சவாரி தனியார் நடத்தி வந்த நிலையில், அதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. இந்நிலையில், அரசு சார்பில் படகு குழாம் மீண்டும் அமைக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. தங்களது மீன்பிடி தொழில் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், மீனவர்களின் கருத்துக்களை கேட்டு செயல்படுத்த வேண்டும் என, மீனவர்கள் தெரிவித்து உள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு மீனப்பகுதியில், 40 மீனவ கிராமங்கள் கடல் மற்றும் ஏரியில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றன. பழவேற்காடு ஏரியானது, இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உவர்ப்பு நீர் ஏரியாக ஆந்திர மாநிலம் வரை பரவி இருக்கிறது.ஆரணி ஆறு மற்றும் பகிங்ஹாம் கால்வாய் வழியாக வரும் நன்னீர், முகத்துவாரம் வழியாக வரும் கடல்நீர் சேர்ந்த உவர்ப்பு நீர் ஏரியாக இது உள்ளது.பழவேற்காடு ஏரியில் கிடைக்கும் மீன், இறால் வகைகள் நல்ல சுவையுடன் இருப்பதால், இவற்றிற்கு கிராக்கி அதிகம். மீன்பிடி தொழில் மட்டுமே இங்குள்ள மீனவர்கள் வாழ்வாதாரமாக இருக்கிறது.மீன்பிடி தொழில் தவிர்த்து, பழவேற்காடு ஏரியானது, பல்வேறு வகையான பறவைகளை கொண்ட சரணாலய பகுதியாகவும் திகழ்கிறது. இங்கு ஆண்டுதோறும், ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வந்து செல்கின்றன.பல்வேறு பன்முக பண்புகளை கொண்ட பழவேற்காடு ஏரி, ஆங்கிலேயர் ஆட்சி காலத்திற்கு பின், துார்வாரப்படாமல் கிடக்கிறது. பழவேற்காடு ஏரியை துார்வாரி புதுப்பிக்க வேண்டும் என, மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதற்கான நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது.இந்நிலையில், கடந்த, 18ம் தேதி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில், சுற்றுலா, மீன்வளம், வனத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பழவேற்காடு ஏரிப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, பழவேற்காடு ஏரியில், சுற்றுலாத்துறை வாயிலாக படகுசவாரி செயல்படுத்த திட்டமிட்டப்பட்டது. பழவேற்காடில் படகு சவாரி செயல்படுத்துவதால், சுற்றுலா பயணியர் அதிகளவில் வருகை தருவர் எனவும், அதனால், மீனவ மக்களின் வாழ்வாதாரம் உயரும் என தெரிவிக்கப்பட்டது.கடந்த, 2011ம் ஆண்டு, பழவேற்காடு ஏரியில் சவாரி சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில் அதில், பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த, 22பேர் ஏரி நீரில் மூழ்கி இறந்தனர். இந்த கோர சம்பவத்தை தொடர்ந்து, பழவேற்காடு ஏரியில் படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டது.தடையை மீறி படகு சவாரிக்கு, சுற்றுலாப்பயணியரை அழைத்து சென்றால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்திருந்தது. தற்போது வரை அந்த தடை நீடிக்கிறது. இந்நிலையில், மாவட்ட நிர்வாகமே தற்போது படகு சவாரி செயல்படுத்த திட்டமிட்டு உள்ளது.மீனவர்கள் முக்கிய வாழ்வாதாரமாக உள்ள ஏரியில் படகு சவாரி செயல்படுத்துவதால், மீன்பிடி தொழில் பாதுகாப்பு குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என, மீனவர்கள் தெரிவித்து உள்ளனர்.இது குறித்து தமிழ்நாடு மீனவர் சங்க மாநில செயலர் துரைமகேந்திரன் கூறியதாவது:ஏரியில்தான் மீன்களின் இனப்பெருக்கம் அதிகமாக இருக்கும். படகு சவாரி செயல்படுத்துவதால் அவற்றிற்கு பாதிப்பு ஏற்படக்கூடாது. அதேபோன்று மீனவர்களின் மீன்பிடி உரிமைகள் பறிக்கக்கூடாது. மீன்பிடி தொழில் மற்றும் பறவைகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும். படகுசவாரி தொழிலில் உள்ளூர் மீனவர்களுக்கு முன்னுரிமை தரவேண்டும். படகுசவாரி அமைப்பதற்கு முன், மீனவர்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஏற்று செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

பாதுகாப்பு அவசியம்

இது குறித்து சமூகஆர்வலர்கள் கூறியதாவது:கடந்த, 2011க்கு முன் வரை, பழவேற்காடு பகுதியை சேர்ந்த, தனிநபர்கள் சிலர், சுற்றுலாப்பயணியரை அவர்களது சொந்த படகுகளில் சவாரிக்கு அழைத்து சென்றனர். எந்தவொரு பாதுகாப்பு இன்றி, கூட்டம் கூட்டமாக அழைத்து செல்லப்பட்டதின் விளைவு, கடந்த, 2011 டிசம்பர், 25ம் தேதி படகு விபத்து ஏற்பட்டது.தற்போது, தமிழக சுற்றுலாத்துறை சார்பில், படகுசவாரி மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. லைப் ஜாக்கெட், நவீன படகுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் படகுசவாரி செயல்படுத்த வேண்டும்.தற்போது தடையை மீறி விடுமுறை நாட்களில் தனிநபர்கள் வாயிலாக நடைபெறும் பாதுகாப்பற்ற படகுசவாரியை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ