சீரமைக்காத இணைப்பு சாலை அம்மையார்குப்பத்தில் அவதி
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் அமைந்துள்ளது அம்மையார்குப்பம். அதை அடுத்து ஆந்திர மாநில எல்லையை ஒட்டியுள்ள, தமிழக எல்லைக்கு உட்பட்ட 30க்கும் மேற்பட்ட கிராமத்தினர், அம்மையார்குப்பம் வழியாக ஆர்.கே.பேட்டைக்கு தினசரி வந்து செல்கின்றனர். அம்மையார்குப்பம் மற்றும் ஆர்.கே.பேட்டை இடையே அமைந்துள்ள ஓடையின் மீது பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம், இரண்டு ஆண்டுகளுக்கு முன் விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால், அதற்கான இணைப்பு சாலை உறுதியாகவும், முறையாகவும் அமைக்கப்படாததால், குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், வாகனஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பகுதியில் தார் சாலையும் மோசமாக இருப்பதால், அதன் ஓரத்தில் உள்ள மண்பாதையை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், விபத்துகள் நேரிடும் அபாயம் உள்ளது. தினசரி ஆயிரக்கணக்கானோர் பயணிக்கும் இந்த சாலையை, விரைந்து சீரமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.