ஆண்டார்மடம் சாலை தரம் உயர்வு
பொன்னேரி:பொன்னேரி அடுத்த, காட்டூர் கிராமத்தில் இருந்து, அபிராமபுரம், கடப்பாக்கம், சிறுபழவேற்காடு, ஆண்டார்மடம் வழியாக, ஒன்றிய சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது.சாலை முழுதும் சரளை கற்கள் பெயர்ந்தும், சிறுபாலங்கள் சேதம் அடைந்தும் கிடந்தன. இதனால் மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சிரமத்துடன் பயணித்து வந்தனர்.இந்நிலையில், மீஞ்சூர் ஒன்றியத்தில், 40க்கும் மேற்பட்ட ஒன்றிய சாலைகளை, 2023ல், மாநில நெடுஞ்சாலையில் ஒப்படைக்கப்பட்டன. அதில், மேற்கண்ட சாலையும் ஒன்றாகும்.அதையடுத்து, தற்போது, மாநில நெடுஞ்சாலைத் துறையின், இதர மாவட்ட சாலைகள் பிரிவில், காட்டூர் - ஆண்டார்மடம் இடையே சாலையை புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இந்த சாலையானது, மீஞ்சூர் - திருப்பாலைவனம், பொன்னேரி - பழவேற்காடு ஆகிய மாநில நெடுஞ்சாலைகளை இணைக்கிறது.மொத்தமுள்ள, 5.5 கி.மீ., சாலைக்கு, ஆறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, மூன்று நிலைகளாக பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சேதமான சாலைகளை முழுமையாக பெயர்த்து எடுத்துவிட்டு, அங்கு புதியதாக தார் சாலையும், சிறுபாலங்களுக்கான கட்டுமான பணிகளும் நடைபெறுகிறது.மேலும், ஆண்டார்மடம் கிராமத்தில், ஆரணி ஆற்றின் குறுக்கே இந்த சாலை பயணிப்பதால், அங்கு உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயாரித்து அரசின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி கிடந்த காட்டூர் - ஆண்டார்மடம் இடையேயான சாலைக்கு தற்போது விமோசனம் கிடைத்து உள்ளதை எண்ணி கிராமவாசிகள் நிம்மதி அடைந்து உள்ளனர்.