அங்கன்வாடி மையத்தை சீரமைக்க எதிர்பார்ப்பு
திருவாலங்காடு, திருவாலங்காடு ஒன்றியத்தில், 124 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், சில கட்டடங்கள் பழுதடைந்துள்ளன. திருவாலங்காடு, மணவூர், கனகம்மாசத்திரம் உள்ளிட்ட இடங்களில் புதிய அங்கன்வாடி மையக் கட்டடங்கள் கட்டப்பட்டு வந்தாலும், பல இடங்களில் வாடகை கட்டடங்களில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகின்றது.பழைய கட்டடங்கள் முறையாக பராமரிக்காததால், பல இடங்களில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.திருவாலங்காடு அடுத்த, பகவதி பட்டாபிராமபுரம் கிராமத்தில் அங்கன்வாடி மைய கட்டடத்தின் மேற்தளத்தில் செடிகள் முளைத்துள்ளன. மேலும், அருகே இருந்த மரத்தில் இருந்து விழும் சருகுகள் தளத்தில், மழைநீருடன் சேர்ந்து மக்குவதால், வலுவிழக்கும் நிலை உள்ளது.தற்போது கட்டடம் ஆங்காங்கே விரிசலடைந்து உள்ளதால், குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.எனவே, குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து, அங்கன்வாடி மையத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.