3 மாதமாக திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் அங்கன்வாடி மையம்
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், பெரியகளக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்டது சின்னகளக்காட்டூர் கிராமம். இக்கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில், 20 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.இந்த அங்கன்வாடி மையத்திற்கான கட்டடம் மிகவும் பழுதடைந்ததை அடுத்து, பயன்பாட்டில் இருந்து கைவிடப்பட்டது. இதையடுத்து, அதே கிராமத்தில் வாடகை கட்டடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது.இதனிடையே, சின்னகளக்காட்டூர் கிராமத்தில் பயன்பாட்டில் இல்லாத பழைய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு, அதே இடத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 16.50 லட்சம் ரூபாய் செலவில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.இந்த கட்டட பணி நிறைவடைந்து, மூன்று மாதங்களை கடந்தும் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டியே கிடக்கிறது. இதனால், குழந்தைகள் வாடகை கட்டடத்தில் வசதிகள் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே, சின்னகளக்காட்டூரில் உள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, திருவாலங்காடு பி.டி.ஓ., அருள் கூறுகையில், ''சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கூறி, அங்கன்வாடி மைய கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.