லஞ்ச ஒழிப்பு சோதனை ரூ.1.24 லட்சம் பறிமுதல்
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை போக்குவரத்துத் துறை சோதனைச்சாவடியில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் வராத 1.24 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் போக்குவரத்துத் துறை சோதனைச்சாவடி உள்ளது. ஆந்திராவில் இருந்து வரும் வாகனங்களில் வசூல் வேட்டை நடத்துவதாக, லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. நேற்று அதிகாலை, திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., கணேஷ் தலைமையில், ஆய்வாளர்கள் தமிழ்செல்வி, மங்கயர்க்கரசி உள்ளிட்ட, ஐந்து பேர் கொண்ட குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கணக்கில் வராத 1 லட்சத்து, 24, 900 ரூபாய் இருந்தது தெரிந்தது. இதுதொடர்பாக, சோதனைச் சாவடியில் பணியில் இருந்த அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். 'சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.