சமூக விரோதிகள் அட்டகாசம் பத்மாவதி நகர்வாசிகள் அச்சம்
திருவள்ளூர்:திருவள்ளூர் பத்மாவதி நகரில் சமூக விரோதிகள் அதிகரித்துள்ளதால், காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 17வது வார்டு பகுதியில் பத்மாவதி நகர் அமைந்துள்ளது. இங்கு தனியார் பள்ளி, பூங்கா மற்றும் 60க்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ளன. மேலும், 1.5 ஏக்கர் பரப்பளவில் புதிய பூங்காவும் உள்ளது. இந்த நிலையில், பத்மாவதி நகர் அருகே சுடுகாடு உள்ளது.அங்கு, பகல், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் குழுவாக சேர்ந்து மது அருந்தியும், கஞ்சா புகைத்தும் வருகின்றனர். இரவு நேரத்தில் விபசாரம் அதிகளவில் நடப்பதாக பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.மேலும், அங்குள்ள பூங்காவில் காலை - மாலை நேரங்களில் காதலர்கள் குவிந்து, குழந்தைகள் மற்றும் பெற்றோர் முகம்சுளிக்கும் வகையில் அருவருப்பான செயல்களில் ஈடுபடுவதாகவும் குற்றஞ் சாட்டுகின்றனர்.எனவே, பத்மாவதி நகர் பகுதியில் நடைபெறும் சமூக விரோத செயல்களை தடுக்க, காவல் துறையினர் தினமும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.