உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மக்காச்சோள விவசாயிகளுக்கு உதவி: கலெக்டர் உறுதி

மக்காச்சோள விவசாயிகளுக்கு உதவி: கலெக்டர் உறுதி

திருவள்ளூர்:'மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் வழங்கும்' என, திருவள்ளூர் கலெக்டர் தெரிவித்தார்.திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம் சேர்பேடு கிராமத்தில் மாவட்டத்தில் முதன் முறையாக பயிரிடப்பட்ட மக்காச்சோளம் பயிர் அறுவடை விழா நேற்று முன்தினம் நடந்தது. இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் பணியை கலெக்டர் பிரதாப் துவக்கி வைத்தார்.பின் கலெக்டர் கூறியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில் முதன் முறையாக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்த விவசாயிகளிடம் இருந்து 23 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சந்தைவிலை தினமும் மாறினாலும், குறைந்தபட்ச ஆதாரவிலையை விட கூடுதலாகவே விவசாயிகளுக்குக் கிடைக்கும் என்பதால், மக்காச்சோள சாகுபடி லாபகரமான ஒன்றாகவே இருக்கும் என, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.பயிர் சுழற்சி முறையை ஊக்குவிக்கவும், மானாவாரி நெல் சாகுபடி செய்யாத நிலங்களிலும், தரிசாக விடப்படும் நிலங்களிலும் நெல்லை விட குறைவாக தண்ணீர் தேவைப்படும் மக்காச்சோளத்தை சாகுபடி செய்து, ஒன்றியம் வாரியாக சாதகமான நிலங்களில் படிப்படியாக சாகுபடி பரப்பை அதிகரிக்க அரசு ஊக்குவித்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்திலேயே எத்தனால் ஆலை அமைந்திருப்பதால், உற்பத்தி செய்த மக்காச்சோளத்தை உத்தரவாதமாக விற்க இயலும் என்பது, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதி விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் விஷயமாக உள்ளது. மாவட்டத்தில் புது முயற்சியாக மக்காச்சோளம் பயிரிடப்பட்டு, அறுவடை செய்யப்பட்டுள்ளது. மக்காச்சோளப் பயிர் சாகுபடி பரப்பை படிப்படியாக அதிகரிக்கவும், அதன் மூலம் தொடர்ச்சியாக நெல் சாகுபடி செய்து வரும் விவசாயிகள் மத்தியில் மாற்றுப்பயிராக பரவலாக்கச் செய்யும் திட்டமிடப்பட்டு உள்ளது. மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் மாவட்ட நிர்வாகம் செய்ய தயாராக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில், மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கலாதேவி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்-வேளாண்மை மோகன், துணை இயக்குநர் வேதவல்லி, கோவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக விஞ்ஞானி சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எப்போதும் குறையாத விலை

தமிழகத்தில் ஆண்டுக்கு 50 லட்சம் டன் மக்காச்சோளம் தேவை என்ற சூழலில், தற்போது 30 லட்சம் டன் மட்டுமே உற்பத்தி ஆகிறது.மீதமுள்ள 20 லட்சம் டன் ஆந்திரா, கர்நாடகா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பெறப்படுகிறது. மக்காச்சோளத்தில் 60 சதவீதம், கால்நடைகள், கோழி தீவனங்களுக்கும், மதிப்பூட்டப்பட்ட உணவு வகைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. தற்போது எத்தனால் உற்பத்திக்கும் மக்காச்சோளம் பயன்படுத்தப்படுகிறது. மக்காச்சோளம் எவ்வளவு விளைவிக்கப்பட்டாலும், அதற்கான தேவை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால், அதன் விலை குறைவதற்கான வாய்ப்பே இல்லை. மக்காச்சோளத்துக்கு 22.25 ரூபாய் குறைந்தபட்ச ஆதார விலையாக மத்திய அரசு நிர்ணயத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ