கோலடியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு விளையாட்டு வீரர்கள் நுாதன போராட்டம்
திருவேற்காடு:திருவேற்காடு, கோலடி பகுதியில், நகராட்சிக்கு சொந்தமான, 44 சென்ட் நிலம் உள்ளது. அங்கு, பூந்தமல்லி, மாங்காடு நகராட்சிகள் மற்றும் ஒன்பது ஊராட்சிகளை ஒருங்கிணைத்து, பாதாள சாக்கடை திட்ட பணிகள் துவங்க உள்ளன.இதற்காக, கோலடி மைதானத்தில் உள்ள 33 சென்ட் நிலத்தில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. கோலடி மைதானம் உள்ள பகுதியில், விளையாட்டு திடல், அரசு பள்ளிக்கூடம், சர்ச் மற்றும் பட்டியலின மக்களின் குடியிருப்புகள் உள்ளன.அங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால், கோலடி, அயனம்பாக்கம் ஏரிகளின் நிலத்தடி நீர் மாசடையும். எனவே அங்கு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கூடாது என, ஏற்கனவே பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மதியம் அப்பகுதியை சேர்ந்த, 200க்கும் விளையாட்டு வீரர்கள், கோலடி பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, கிரிக்கெட் பேட், பால், கால் பந்து போன்ற உபகரணங்களை கீழே வீசி, மண் அள்ளி போட்டு நுாதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோலடி மைதானத்தில் கிரிக்கெட், கால்பந்து, கபடி, சிலம்பம் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.சிறுமியர், பெண்கள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சியை தினமும் மேற்கொண்டு வருகின்றனர்.