உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பினாமி பெயரில் டெண்டர் எடுத்து ஊராட்சி செயலர்கள்...  அட்டூழியம் உயர் அதிகாரிகளையும் வளைத்து போட்டு சுருட்டல்

பினாமி பெயரில் டெண்டர் எடுத்து ஊராட்சி செயலர்கள்...  அட்டூழியம் உயர் அதிகாரிகளையும் வளைத்து போட்டு சுருட்டல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ஊராட்சி செயலர்களில் பெரும்பாலானோர், பினாமி பெயர்களில் டெண்டர் எடுத்து, ஊராட்சி நிதியை சுருட்டி வருகின்றனர். ஊராட்சி தலைவர்கள் இல்லாத நிலையில், கவனிப்பு சரியாக இருந்தால், உயர் அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக, ஊராட்சி கிடைக்கும் நிதி வீணடிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், கடம்பத்துார், ஆர்.கே.பேட்டை, எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி, சோழாவரம், திருத்தணி, திருவாலங்காடு, ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு, புழல், பூந்தமல்லி, பொன்னேரி, வில்லிவாக்கம் ஆகிய, 14 ஒன்றியங்களில், 526 ஊராட்சிகள் உள்ளன. காலிபணியிடம் இந்த ஊராட்சிகளில், 526 ஊராட்சி செயலர்கள் பணிபுரிய வேண்டும். தற்போது, 89 ஊராட்சி செயலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதையடுத்து, ஒரு ஊராட்சி செயலரே கூடுதலாக இரண்டு, மூன்று ஊராட்சிகளை கவனித்து வருகின்றனர். இதனால், சில ஊராட்சிகளில் அத்தியாவசிய பணிகள் நடக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது, ஊராட்சி தலைவர்களின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது. இதனால் ஒன்றிய அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலரான பி.டி.ஓ., கட்டுப்பாட்டில், ஊராட்சி செயலர்களே தனி அதிகாரிகளாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் ஊராட்சி செயலர்கள், தன் மனைவி, மகன், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரில், ஒப்பந்தம் எடுத்து, தாங்கள் பணியாற்றும் ஊராட்சிகளில் சாலை, கழிவுநீர் கால்வாய், அரசின் வீடு கட்டுவது போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குற்றச்சாட்டு இதற்கு, ஒன்றியம் முதல் ஊரக வளர்ச்சித்துறை வரை உள்ள, அனைத்து அதிகாரிகளையும் சரிகட்டி விடுகின்றனர். இதனால் எந்த சிக்கலும் இல்லாமல், பணிக்கான தொகை விடுவிக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக, பிற ஊராட்சிகளை கவனித்து வரும் ஊராட்சி செயலர்கள் செய்யாத பணிகளுக்கும், 'பில்' போட்டு பணம் எடுத்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதை கவனிக்க வேண்டிய தணிக்கை அதிகாரிகளை, ஊராட்சி செயலர்கள் கவனித்து விடுவதால், எந்த சிக்கலும் ஏற்படுவதில்லை. ஊராட்சிகளில் வீடுகள், தொழிற் சாலைகளில் வரி போடுவது, புதிய வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்குவது போன்ற பல்வேறு பணிகளிலும் ஊராட்சி செயலர்கள், தங்கள் இஷ்டம் போல் கல்லா கட்டி வருகின்றனர். கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட வெங்கத்துார், கொட்டையூர், காவாங்கொளத்துார், பாப்பரம்பாக்கம், புதுமாவிலங்கை, வயலுார், குமாரசேரி, உளுந்தை, சத்தரை, கூவம் ஊராட்சி மன்ற செயலர்கள் ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வெங்கத்துார் ஊராட்சி மன்ற செயலர், ஆளும் கட்சியினர் ஆதரவோடு தன் மனைவி, மகன்கள் மற்றும் உறவினர்கள் பெயரில் ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார். இவ்வாறு ஊராட்சி செயலர்கள் ஒப்பந்ததாரராக மாறி விட்டதால், பல ஊராட்சிகளில் குடிநீர், கழிவுநீர் கால்வாய், சாலை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளுக்கு பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் ஊராட்சிகளில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை