உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சோதனைச்சாவடி கடைகளுக்கான ஏலம் போக்குவரத்து துறையிடம் ஒப்படைப்பு

சோதனைச்சாவடி கடைகளுக்கான ஏலம் போக்குவரத்து துறையிடம் ஒப்படைப்பு

கும்மிடிப்பூண்டி, அரசியல் குறுக்கீடுகளால், ஏழு ஆண்டுகளாக சோதனைச்சாவடியில் உள்ள கடைகளை ஏலம் விட முடியாமல் போனதால், தற்போது, ஏலம் விடும் பொறுப்பை போக்குவரத்து துறையிடம், பொது பணித்துறையினர் ஒப்படைத்துள்ளனர். சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில், ஆந்திர எல்லையோர தமிழக பகுதியில், அ.தி.மு.க., ஆட்சியில், 2018 ஜூன் மாதம், மாநில எல்லையோர ஒருங்கிணைந்த சோதனைச்சாவடிகள் திறக்கப்பட்டன. ஆந்திரா நோக்கிய திசையில் ஒன்றும், தமிழகம் நோக்கிய திசையில் ஒன்றும் என, இரு சோதனைச்சாவடிகள் தற்போது செயல்பட்டு வருகின்றன. அதில், நகலகம், உணவகம், வாகன உதிரி பாகங்கள் மற்றும் மருந்து கடை வைப்பதற்காக, தலா ஐந்து கடைகள் என, மொத்தம், 10 கடைகள் நிறுவப்பட்டன. சோதனைச்சாவடி திறந்த ஆண்டிலேயே, அந்த கடைகளுக்கான பொது ஏலம் அறிவிக்கப்பட்டது. அப்போது, ஏலம் எடுப்பதில், அரசியல் கட்சியினர் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, மறுதேதி அறிவிக்கப்படாமல் ஏலம் ஒத் தி வைக்கப்பட்டது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், ௨௦௨௨ ஆகஸ்டில் பொது ஏலம் நடைபெற்றது. அப்போதும், கடைகளை பிரிப்பதில், அரசியல் கட்சியினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், பிரச்னை காரணமாக, ஏலம் மீண்டும் ரத்து செய்யப்பட்டது. அரசியல் தலையீடுகள் காரணமாக, கடந்த ஏழு ஆண்டுகளாக, அந்த 10 கடைகளையும் ஏலம் விட முடியாமல் பொது பணித்துறையினர் திணறி வந்தனர். அந்த சோதனைச்சாவடிகளில், தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளை நிறுத்தி, ஆவண தணிக்கை செய்யப்படுகிறது. பல மணி நேரம் லாரிகள் அங்கு காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அதன் ஓட்டுநர்கள் நகல் எடுப்பதற்கும், காத்திருக்கும் நேரத்தில், உணவு மற்றும் தேநீர் அருந்தவும், 3 கி.மீ., தொலைவில் உள்ள எளாவூர் பஜார் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். சோதனைச்சாவடி வளாகத்தில் கடைகள் இருந்தும், அவை திறக்கப்படாத நிலையில், அங்கு வரும் வாகன ஓட்டிகள், மற்றொரு வாகனத்தில், 'லிப்ட்' கேட்டு, எளாவூர் பஜார் பகுதி சென்று வருவதால் அலைக்கழிப்புக்கு ஆளாகின்றனர். இந்நிலையில், கடைகளை திறக்க வேண்டியதன் அவசியம் கருதி, அதனை ஏலம் விடும் பொறுப்பை போக்குவரத்து துறையிடம், பொது பணித்துறையினர் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக, திருவள்ளூர் மாவட்ட பொது பணித்துறை செயற்பொறியாளர் சார்பில், செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், ஒரு கடைக்கு, 2,513 ரூபாய் மாத வாடகை நிர்ணயம் செய்து, குத்தகைதாரரை போக்குவரத்து துறையினரே தேர்வு செய்து மாதந்தோறும், 10 கடைகளுக்கான மாத வாடகையாக, 25,130 ரூபாயை பொதுப்பணித் துறையின் கணக்கில் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ