ஆர்.டி.ஓ., அலுவலகத்தை ஆட்டோ ஓட்டுனர்கள் முற்றுகை
திருவள்ளூர்:திருவள்ளூரில் மக்களுக்கு இடையூறாக நிறுத்தியதாக, 11 ஆட்டோக்களை திருவள்ளூர் நகர போலீசார் பறிமுதல் செய்து, நேற்று காலை 10:00 மணிக்கு, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.இந்த ஆட்டோக்களை நேற்று மாலை வரை விடுவிக்காததால், ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுனர்கள் இரவு 7:00 மணிக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் நகர போலீசார், ஆட்டோ ஓட்டுனர்களிடம் பேச்சு நடத்தினர். இதில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, ஏழு ஆட்டோக்களுக்கு தலா 500 ரூபாய் வீதம் 3,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, ஆட்டோ விடுவிக்கப்பட்டது. மீதமுள்ள நான்கு ஆட்டோக்களுக்கு முறையான பெர்மிட், இன்சூரன்ஸ் இல்லாததால், விடுவிக்கப்படாமல் விசாரித்து வருவதாக, வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்தார்.