நெடுஞ்சாலையில் பெருகி வரும் பேனர் கலாசாரம்
கடம்பத்துார்:சென்னை பள்ளிக்கரணையில் நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ, 23, என்ற பெண் லாரியில் சிக்கி இறந்தார். இதையடுத்து, நெடுஞ்சாலையோரங்களில் விளம்பர பேனர்கள் வைக்க உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.இந்நிலையில், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சியில், திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலை மற்றும் திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் உயரமான கட்டடங்கள் மீது பேனர்கள் வைப்பது மற்றும் மொபைல்போன் டவர்கள் வைப்பது தற்போது அதிகரித்து வருகிறது.இதேபோல, திருமழிசை பேரூராட்சியிலும் உயரமான கட்டடங்கள் மீது வைக்கப்படும் விளம்பர பேனர்கள் அதிகரித்து வருகின்றன.இவ்வாறு அனுமதியில்லாமல் உயரமான கட்டடங்கள் மீது வைக்கப்படும் விளம்பர பேனர்களால் மற்றும் மொபைல்போன் டவர்களால் வாகன ஒட்டிகள் கவனம் சிதறி விபத்து ஏற்படும் நிலை உள்ளது.இந்த பேனர்கள் வைப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டுகின்றனர்.எனவே, நெடுஞ்சாலையோரம் உயரமான கட்டடங்கள் மீது பேனர் வைப்பதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் மற்றும் வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.