தொகுப்பு வீடு கட்டும் பயனாளிகள் முதல் தவணை கேட்டு ஆர்ப்பாட்டம்
திருத்தணி:திருத்தணி ஒன்றியம், வீரகநல்லுார் ஊராட்சியில் உள்ள பகத்சிங் நகர் இருளர் காலனியில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன், பத்து பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கு ஒன்றிய நிர்வாகம் ஆணை வழங்கியது.ஒவ்வொரு வீட்டிற்கும் தலா, 3.50 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அதிகாரிகள் கூறினர். இந்த தொகை மூன்று தவணைகளாக வழங்கப்படும் ஒன்றிய நிர்வாகம் தெரிவித்தது. முதல் தவணை வீட்டிற்கு அடித்தளம் முடித்து சுவர் கட்டும் போது வழங்கப்படும் என ஒன்றிய அதிகாரிகள் கூறினர். பத்து பயனாளிகளும் அடித்தளம் மற்றும் சுற்றுசுவர் கட்டும் பணி துவங்கியுள்ள நிலையில், இதுவரை பணம் வழங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த, பயனாளிகள் நேற்று திருத்தணி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு வழங்கினர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர்.