சிறுவன் கொலை வழக்கு: 4 பேர் கைது
சோழவரம்: சோழவரம் அருகே கை, கால்களை கட்டி, சிறுவன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில், நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். சோழவரம் அடுத்த அலமாதி, தீரன் சின்னமலை தெருவைச் சேர்ந்தவர் முத்து மகன் பாபு, 17; வெல்டிங் தொழிலாளி. நேற்று முன்தினம், வீட்டில் தனியாக இருந்த பாபு, கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து, சோழவரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் தெரியவந்ததாவது: சோழவரம் அடுத்த பெருமாள்அடிபாதம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித், 26; ஆட்டோ ஓட்டுநர். இரண்டு மாதங்களுக்கு முன், இவருக்கு தெரிந்த பெண் ஒருவரை, பாபு அவதுாறாக பேசியுள்ளார். இதை, அஜித் தட்டிகேட்ட போது, பாபு அவரை தாக்கினார். மேலும், அஜித்தை பார்க்கும் சமயங்களில் அவதுறாக பேசி வந்தார். இதனால், பாபு மீது அஜித் கோபத்தில் இருந்தார். இந்நிலையில், பாபு வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து, நேற்று முன்தினம் அதிகாலை அஜித், நண்பர்களுடன் அங்கு சென்றார். நண்பர்களுடன் சேர்ந்து, பாபுவின் கை, கால்களை கட்டிய பின், கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தப்பினார். இவ்வாறு தெரிய வந்தது. போலீசார் நேற்று, அஜித், 26, அவரது நண்பர்களான கவுதம், 22, பழனிபாரதி, 28, சென்னை காவாங்கரையைச் சேர்ந்த பூவரசன், 26, ஆகியோரை கைது செய்தனர்.