உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகள்...அதிகரிப்பு: அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசுக்கு இழப்பு

அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகள்...அதிகரிப்பு: அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசுக்கு இழப்பு

கடம்பத்துார்:மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியம் மற்றும் ஊராட்சிகளில் உள்ள விவசாய நிலங்களில் அனுமதியின்றி இயங்கும் செங்கல் சூளைகளால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் அலட்சியமே இதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி, கடம்பத்துார், மீஞ்சூர், பள்ளிப்பட்டு, பூந்தமல்லி, பூண்டி, புழல், ஆர்.கே.பேட்டை, சோழவரம், திருத்தணி, திருவாலங்காடு, திருவள்ளூர், வில்லிவாக்கம் என, 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகள் உள்ளன.இந்த ஊராட்சிகளில் அனுமதியின்றி செங்கல் சூளை இயங்குவது தற்போது அதிகரித்து வருகிறது. இவ்வாறு செங்கல் சூளைகள் அமைப்பதற்கு, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் வாயிலாக ஒன்றிய நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற வேண்டும்.ஆனால், செங்கல் சூளை நடத்துவோர் முறையான அனுமதி பெறாமல் நடத்தி வருவதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 3 அடி ஆழத்திற்கு மேல் மண் அள்ளக்கூடாது என்ற விதி இருந்தும், செங்கல் சூளை நடத்துவோர் அதை பின்பற்றுவதில்லை.அதேபோல், ஊராட்சி பகுதியில் உள்ள ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகள் மற்றும் ஹிந்து அறநிலையத் துறை நிலம் உட்பட அரசு நிலங்களிலும், செங்கல் சூளை நடத்தி வருகின்றனர். இதை எந்த அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை.

அனுமதி பெறுவது எப்படி

ஊராட்சி பகுதிகளில் பட்டா நிலங்களில் செங்கல் சூளை நடத்துவோர், சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் தடையில்லா சான்று பெற்று, ஒன்றிய நிர்வாகத்திடம் அனுமதி கோரி மனு அளிக்க வேண்டும்.இதற்கு கட்டணமாக, ஒரு லட்சம் முதல் இரண்டரை லட்சம் செங்கல் வரை 2,000 ரூபாயும், இரண்டரை லட்சம் முதல் ஐந்து லட்சம் செங்கல் வரை 2,500 ரூபாய் கட்டணமும் செலுத்த வேணடும்.மேலும் குடியிருப்புகள், பள்ளி, கல்லூரி மற்றும் போக்குவரத்து நிறைந்த சாலையோரம் அல்லது மக்களுக்கு இடையூறு இல்லாமல் செங்கல் சூளை நடத்த வேண்டும்.ஆனால், ஊராட்சி பகுதிகளில் செங்கல் சூளை நடத்துவோர், பெரும்பாலும் விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளில் செங்கல் சூளை நடத்தி வருகின்றனர்.மேலும், சாலையோரங்களில் அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகளில் இருந்து வெளியேறும் புகையால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகளை ஆய்வு செய்து, அரசுக்கு வருவாய் தரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மாவட்டம் முழுதும் ஏரி, குளம், குட்டை போன்ற பட்டா நிலங்களில் அனுமதி மற்றும் அனுமதி இல்லாமல் இயங்கி வரும் செங்கல் சூளைகள் குறித்து, அப்பகுதியில் உள்ள கிராம நிர்வாகம் மற்றும் அலுவலர்கள் மூலம் கணக்கெடுக்கும் பணி நடத்தி மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளித்துள்ளோம்.மாவட்ட நிர்வாகம் அளிக்கும் உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.வருவாய்த் துறை அதிகாரி,திருவள்ளூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை