மேலும் செய்திகள்
நரிக்குடி ரோட்டில் வாகனங்கள் நிறுத்த தடை வருமா
20-Oct-2025
பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகத்தின் அலட்சியத்தால், சிறுபாலம் உடைந்து, பல்வேறு கிராமங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மீஞ்சூர் ஒன்றியம் ஆலாடு ஊராட்சிக்குட்பட்ட, ஆலாடு - வெள்ளக்குளம் சாலையில், மழைநீர் செல்வதற்கான சிறுபாலம் சேதமடைந்து இருந்தது. பாலத்தின் இணைப்பு சாலைகளும் உள்வாங்கி, வாகனங்கள் சிரமத்துடன் சென்று வந்தன. இது தொடர்பாக கிராம மக்கள், மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து, கடந்த ஆகஸ்ட் மாதம் நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதன்பின்னும், சிறுபாலத்தை புதுப்பிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இரண்டு நாட்களுக்கு முன், கனமழையால் சிறுபாலம் உடைந்து உள்வாங்கியது. இதனால், பாலத்தின் வழியாக மழைநீர் செல்ல முடியாத நிலையில், சேதமடைந்த இணைப்பு சாலையை அரித்து கொண்டு சென்றது. இதன் காரணமாக சாலை துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, மழை இல்லாத நிலையில், துண்டிக்கப்பட்ட சாலையில் மண் கொட்டி, இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்வதற்கு பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வழியாக, இருசக்கர வாகனங்கள் சிரமத்துடன் செல்கின்றன. நான்கு சக்கர வாகனங்கள், 10 - 12 கி.மீ., சுற்றிக்கொண்டு செல்கின்றன. இரண்டு மாதங்களுக்கு முன்பே, பாலம் சேதமடைந்துள்ளது குறித்து தெரிந்தும், ஒன்றிய நிர்வாகத்தின் அலட்சியத்தால், தற்போது வெள்ளக்குளம், பி.என்.கண்டிகை, தேவதானம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கையாக, சிறுபாலம் அமைக்க வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
20-Oct-2025