உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி ரயில் நிலையம் - முருகன் கோவிலுக்கு பஸ் வசதி அவசியம்: பக்தர்கள் எதிர்பார்ப்பு

திருத்தணி ரயில் நிலையம் - முருகன் கோவிலுக்கு பஸ் வசதி அவசியம்: பக்தர்கள் எதிர்பார்ப்பு

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலுக்கு, தமிழகம், ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவர் முருகப்பெருமானை தரிசித்து செல்கின்றனர். இதில், பெரும்பாலான பக்தர்கள் மின்சார ரயில் மற்றும் விரைவு ரயில் வாயிலாக திருத்தணி ரயில் நிலையத்திற்கு வந்து அங்கிருந்து மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர்.இந்நிலையில், ரயில் நிலையத்தில் இருந்து, முருகன் மலைக்கோவிலுக்கு நேரடியாக பேருந்து வசதியில்லை. மாறாக, திருத்தணி பேருந்து நிலையம் அருகே உள்ள கோவில் விடுதியான தணிகை இல்லத்தில் இருந்து கோவில் நிர்வாகம் சார்பில், இரு பேருந்துகள் மலைக்கோவிலுக்கு இயக்கப்படுகின்றன.இதனால் பயணியர் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையம் மற்றும் மலைக்கோவிலுக்கு செல்வதற்கு ஆட்டோ வாயிலாக செல்கின்றனர்.ரயில் நிலையத்தில் இருந்து, மலைக்கோவிலுக்கு, இரண்டு கிலோ மீட்டர் துாரத்திற்கு ஆட்டோ ஓட்டுனர்கள், குறைந்தபட்சம், 200 - 300 ரூபாய் வரை கட்டாய வசூலிக்கின்றனர். இதனால், சாதாரண பக்தர்கள் கடும் சிரமப்படுகின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் ஒன்றிணைந்து ரயில் நிலையத்தில் இருந்து, மலைக்கோவிலுக்கு நேரடியாக பேருந்துகள் இயக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.இது குறித்து, திருத்தணி கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன் கூறியதாவது:திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை சார்பில், இரண்டு அரசு பேருந்துகள் ரயில் நிலையத்தில் இருந்து, மலைக்கோவிலுக்கு விரைவில் இயக்கப்பட உள்ளன.இதற்கான ஆணைகளும் பெறப்பட்டுள்ளன. அடுத்த மாதத்திற்குள் ரயில் நிலையத்தில் இருந்து. முருகன் மலைக்கோவிலுக்கு பேருந்துகள் கட்டாயம் இயக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !