உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பருவமழை வெள்ளப்பெருக்கை ஆரணி ஆறு...எதிர்கொள்ளுமா?:கரை உடைப்புகளை தடுக்குமா கான்கிரீட் சுவர்

பருவமழை வெள்ளப்பெருக்கை ஆரணி ஆறு...எதிர்கொள்ளுமா?:கரை உடைப்புகளை தடுக்குமா கான்கிரீட் சுவர்

பொன்னேரி:உடைப்பு ஏற்படும் ஆரணி ஆற்று கரை பகுதிகளை கண்டறிந்து, அங்கு கான்கிரீட் தடுப்பு சுவர்கள் அமைத்து பலப்படுத்தப்பட்டு உள்ளதால், வெள்ளப்பெருக்கை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கிறது. சீரமைப்பு பணிகளால் கரைகள் உடைப்பு ஏற்படுவதை தவிர்க்கப்படுமா? பழைய நிலையே தொடருமா? என கிராமவாசிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த ரெட்டிப்பாளையம், தத்தமஞ்சி, சோமஞ்சேரி, பிரளயம்பாக்கம் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் ஆரணி ஆற்றின் கரையோர பகுதிகளில் அமைந்து உள்ளன.ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரங்களில் பலவீனமாக உள்ள கரைகள் உடைப்பு ஏற்படுவதும், ஆற்று நீர் கிராமங்களுக்குள் புகுந்து பெரும் சேதங்களை ஏற்படுத்துவதும் தொடர் கதையாக இருந்தது.கடந்த ஆண்டு மழையின்போதும், ரெட்டிப்பாளையம், சோமஞ்சேரி, தத்தமஞ்சி ஆகிய கிராமங்களில் ஆற்றின் கரைகள் உடைந்தன. ஆற்று வெள்ளம் உடைப்புகள் வழியாக வெளியேறி குடியிருப்புகளையும், விவசாய நிலங்களையும் மூழ்கடித்தது.இதனால் தத்தமஞ்சி, பிரளயம்பாக்கம், சோமஞ்சேரி, வஞ்சிவாக்கம், போலாச்சியம்மன்குளம், கணவான்துறை, தொட்டிமேடு, அவுரிவாக்கம், கம்மாளமடம் உள்ளிட்ட, 20 கிராமங்களை மழைநீர் சூழ்ந்தது.பொன்னேரி - பழவேற்காடு சாலை, மீஞ்சூர் - திருப்பாலைவனம் சாலைகளிலும் ஆற்று நீர் சூழ்ந்தது, மூன்று தினங்கள் போக்குவரத்து பாதித்தது.ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் மூழ்கியதால், விவசாயிகளும் பெரும் பாதிப்பிற்கு ஆளாகினர். ஒவ்வொரு ஆண்டும் இதே நிலை தொடர்வதால், இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என வெள்ள சேதங்களை பார்வையிட வந்த மத்திய, மாநில ஆய்வு குழுவினரிடம் கிராமவாசிகள் வலியுறுத்தினர்.கிராமவாசிகளிடம் கோரிக்கையின் பயனாக ரெட்டிப்பாளையம், சோமஞ்சேரி, தத்தமஞ்சி ஆகிய கிராமங்களில், 27 கோடி ரூபாயில், கான்கிரீட் தடுப்பு சுவர்களுடன் கரைகள் பலப்படுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கியது.கடந்த மார்ச் மாதம் இதற்கான கட்டுமான பணிகள் துவங்கப்பட்டன. உடைப்பு ஏற்படும் ஆற்றின் வளைவுப்பகுதிகளின் உள்பகுதியில் ஏழு மீ. உயரத்தில் கான்கிரீட் சுவர்கள் அமைக்கப்பட்டன.பின், 5மீ., அகலத்தில் மண் கொட்டி கரைகள் பலப்படுத்தப்பட்டன. ரெட்டிப்பாளையம், சோமஞ்சேரி, தத்தமஞ்சி, ஆண்டார்மடம் ஆகிய பகுதிகளில், மொத்தம், 1.07 கி.மீ., தொலைவிற்கு கான்கிரீட் சுவருடன் கரைகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.இதனால் இந்த ஆண்டு ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும், கரைகள் உடைப்பு ஏற்படாது என நீர்வளத்துறையினர் தெரிவிக்கின்றனர்.ஆரணி ஆற்று கரையோர மக்கள் கூறியதாவது:ஆற்று கரைகள் பலப்படுத்தப்பட்டு இருப்பதால் உடைப்புகள் இருக்காது என நம்புகிறோம். அதேசமயம், கான்கிரீட் கட்டுமானங்கள் எந்த அளவிற்கு தரமாக அமைக்கப்பட்டது என தெரியவில்லை. ஆண்டார்மடம், ரெட்டிப்பாளையம் பகுதிகளில் பணிகள் துவங்கும்போதே கட்டுமான பணிகளில் தரம் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருந்தோம். அதற்கு அதிகாரிகளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. தொடர்ந்து அங்கு பணிகள் நடைபெற்றன. தற்போது பணிகள் நிறைவுற்ற நிலையில், அது வெள்ளப்பெருக்கை தாங்குமா என்பது ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும்போது தெரிந்துவிடும். நாங்கள் தொடர்ந்து ஆற்றின் கரைகளை கண்காணித்து எச்சரிக்கையுடன் இருக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த ஆண்டு, ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது, 12,000 கனஅடி நீர் வெளியேறியது. அதனால் கரைகளில் உடைப்பு ஏற்பட்டது. தற்போது கரைகள் பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதிகப்படியான வெள்ளப்பெருக்குஏற்பட்டாலும் பாதிப்புகள் இருக்காது. அதுமட்டுமின்றி, தேவையான இடங்களில் மணல் மூட்டைகள் கரையோரங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. தற்போது ஆற்றில் நீர்வரத்து இருப்பதால் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை