ஏரிகளில் தண்ணீரை சேமிக்க கால்வாய் சீரமைப்பு பணி துவக்கம்
திருத்தணி;வடகிழக்கு பருவமழையின் போது கிடைக்கும் தண்ணீரை ஏரிகளில் சேமிப்பதற்கு வசதியாக, நீர்வரத்து கால்வாய்களை சீரமைக்கும் பணியில் நீர்வளத்துறையினர் தீவிரம் காட்டியுள்ளனர். திருத்தணி வருவாய் கோட்டத்தில், 79 ஏரிகளை திருத்தணி நீர்வளத்துறையினர் பராமரித்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழையால், 10 ஏரிகள் நிரம்பியுள்ளன. மீதமுள்ள ஏரிகளுக்கும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும், சில ஏரிகளில் நீர்வரத்து கால்வாய் புதைந்தும், செடிகள் வளர்ந்தும் உள்ளதால், ஏரிக்கு மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் உத்தரவின்படி, ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய்களை சீரமைக்கும் பணியில், நீர்வளத் துறையினர் ஈடு பட்டுள்ளனர். இதுகுறித்து, திருத்தணி நீர்வளத் துறை அதிகாரி கூறியதாவது: நீர்வரத்து கால்வாய்களில் வளர்ந்துள்ள செடிகள் மற்றும் புதைந்திருக்கும் மண்ணை, பொக்லைன் மூலம் அப்புறப்படுத்தும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், தாடூர், தெக்களூர் பெரிய ஏரி மற்றும் சித்தேரி, கிருஷ்ணசமுத்திரம், பூனிமாங்காடு உட்பட 10க்கும் மேற்பட்ட ஏரிகளின் நீர்வரத்து கால்வாய்களில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. அடுத்த மாதம் துவங்கும் வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக, ஏரிகளின் நீர்வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.