பாகம் பிரிப்பதில் தகராறு இரு தரப்பினர் மீது வழக்கு
மப்பேடு:மப்பேடு அருகே, குடும்ப சொத்தை பாகம் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், இரு தரப்பினர் தாக்கிக்கொண்ட வழக்கில், இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிந்து, மப்பேடு போலீசார் விசாரிக்கின்றனர். மப்பேடு அடுத்த தொடுகாடு பகுதியைச் சேர்ந்தவர் பூபேந்திரன், 46. செங்கல்பட்டு, மறைமலை நகரில் வசித்து வருபவர், இவரது சகோதரர் ராஜசேகரின் மனைவி சாந்தகுமாரி, 69. ராஜசேகர் இறந்து விட்டதால், குடும்ப சொத்தை பாகம் பிரிப்பதில், சாந்தகுமாரிக்கும் பூபேந்திரனுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த ஜூன் 22ம் தேதி, சாந்தகுமாரிக்கு வழங்கப்பட்ட நிலத்தை, பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்தபோது, அங்கு வந்த பூபேந்திரன், 'இந்த நிலம் நான் அனுபவித்து வந்தது' எனக்கூறி சாந்தகுமாரி மற்றும் அவரது மகள் சுதாலட்சுமி உறவினர் சுரேஷ் ஆகியோரை ஆபாசமாக பேசி, கைகளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, நேற்று முன்தினம் சாந்தகுமாரி கொடுத்த புகாரின்படி பூபேந்திரன் மீதும், பூபேந்திரன் கொடுத்த புகாரின்படி சாந்தகுமாரி, சுதாலட்சுமி, சுரேஷ் ஆகியோர் மீதும், மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.