திருவள்ளூரில் கோழி கழிச்சல் தடுப்பூசி முகாம் துவக்கம்
திருவள்ளூர்:திருவள்ளுர் மாவட்டத்தில், கோழி கழிச்சல் தடுப்பூசி முகாம், இன்று துவங்குவதாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளுர் மாவட்டத்தில், நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில், பெருவாரியான மக்கள் கோழிகளை வளர்த்து, அதன் வாயிலாக ஓரளவு வருமானம் ஈட்டி வருகின்றனர்.புறக்கடையில் 2.70 லட்சம் கோழிகள், பொதுமக்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு வளர்க்கப்படும் கோழிகளுக்கு, பல்வேறு வகையான நோய் தொற்றுகள் ஏற்படுவது இயல்பு.இதில், கோழி கழிச்சல் நோய் பாதிப்பால், கிராம மக்களின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படும்.கோழி கழிச்சல் நோய், அனைத்து வயது கோழிகளையும் தாக்கும் தன்மையுடையது. இந்நோய் ஏற்படுவதை முன்கூட்டியே தவிர்க்கும் பொருட்டு, ஆண்டுதோறும் இருவார கோழி கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.திருவள்ளுர் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறை வாயிலாக, இன்று முதல் 14ம் தேதி வரை, கோழி கழிச்சல் தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், தங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி, எட்டு வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய கோழிகளுக்கு, தடுப்பூசி போட்டு பயனடையலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.