வேறொரு உயிரினத்தால் காக்கா ஆழி அழிப்பு நீர்வள துறைக்கு தலைமை செயலர் உத்தரவு
சென்னை : காக்கா ஆழியை உண்ணக்கூடிய வேறொரு உயிரினத்தை பயன்படுத்தி, காக்கா ஆழியை அழிக்கும் திட்டத்தை, சோதனை அடிப்படையில் செயல்படுத்துமாறு, தமிழக நீர்வளத்துறைக்கு, தமிழக தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார்.'தென் அமெரிக்க மஸ்ஸல் எனப்படும், காக்கா ஆழி வெளியிடும் துர்நாற்றம் உடைய கசடுகளால், இறால், மீன் உள்ளிட்ட கடல் உயிரினங்கள் வாழ முடியாத நிலை ஏற்படுகிறது.இதனால், பழவேற்காடு ஏரி போன்ற உப்பங்கழிகளை நம்பியிருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, அவற்றை அழிக்க உத்தரவிட வேண்டும்' என, குமரேசன் சூளுரன் என்பவர், தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கு கடந்த, 3ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, 'காக்கா ஆழி இருப்பதால், கொசஸ்தலை ஆற்றில் காட்டுப்பள்ளி, புழுதிவாக்கம், அத்திப்பட்டு ஆகிய இடங்களில் நீரோட்டம் தடைபடுகிறது.எனவே, அக்.,7ல், கை முறையாகவோ, இயந்திரங்கள் வாயிலாகவோ, காக்கா ஆழியை அழிக்கும் பணி துவங்கும்' என, நீர்வளத்துறை தெரிவித்தது.அதன்பிறகும், காக்கா ஆழியை அழிக்கும் பணி துவங்கப்படாததால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி, காக்கா ஆழியை அழிப்பது குறித்து முடிவெடுக்குமாறு, தமிழக தலைமை செயலருக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.அதைத் தொடர்ந்து, தீர்ப்பாயத்தில் நீர்வளத்துறை தாக்கல் செய்த அறிக்கை:தீர்ப்பாய உத்தரவுப்படி நவ.,11ல், தலைமை செயலர் முருகானந்தம் தலைமையில் நடந்த கூட்டத்தில், காக்கா ஆழி அழிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. நீர்வளம், மீன்வளம், சுற்றுச்சூழல், வனம் ஆகிய துறைகளின் செயலர்கள், எண்ணுார், காட்டுப்பள்ளி துறைமுகங்களின் நிர்வாக இயக்குனர்கள், தமிழக ஈர நில ஆணையம், மீன்வளத்துறை அதிகாரிகள் என, 15 பேர் பங்கேற்றனர்.அப்போது, ரசாயனத்தை பயன்படுத்தி, காக்கா ஆழியை அழிக்கலாம் என்ற, தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் அறிக்கை குறித்தும், காக்கா ஆழியை உண்ணக்கூடிய வேறொரு உயிரினத்தை பயன்படுத்தி, காக்கா ஆழியை அழிக்கலாம் என்ற, தேசிய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை குறித்தும் ஆராயப்பட்டது.நீர்நிலைகளில் ரசாயனத்தை பயன்படுத்தினால் மற்ற உயிரினங்கள், தாவரங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். எனவே, காக்கா ஆழியை உண்ணக்கூடிய வேறொரு உயிரினத்தை பயன்படுத்தி, அதை அழிக்கலாம். ஆனால், கொசஸ்தலை ஆற்றில் காட்டுப்பள்ளி, புழுதிவாக்கம், அத்திப்பட்டு ஆகிய இடங்களில் துார்வாராமல் இதை செய்தால் பலன் தராது என, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.எனவே, காக்கா ஆழி இருக்கும் நீர்நிலைகளை துார் வாரி, வேறொரு உயிரினத்தை பயன்படுத்தி, அதை அழிக்கும் திட்டத்தை சோதனை முயற்சியாக மேற்கொண்டு, முடிவுகளை தெரிவிக்குமாறு, நீர்வளத்துறைக்கு தலைமைச் செயலர் உத்தரவிட்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.