ஊத்துக்கோட்டைக்கு தாமதமாக வந்த மாநகர பஸ்கள்: பயணியர் முற்றுகை
ஊத்துக்கோட்டை: பாடியநல்லுார் மாநகர பேருந்து பணிமனையில் இருந்து செங்குன்றம் -ஊத்துக்கோட்டை வழித்தடத்தில், 7 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை செங்குன்றம், ஜனப்பன்சத்திரம் கூட்டுச்சாலை, கன்னிகைப்பேர், பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம் வழியே ஊத்துக்கோட்டை சென்று வருகிறது. ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தினமும், வேலைக்கு செல்பவர்கள் ரூ.1,000 கொடுத்து பாஸ் வாங்கி பயணிக்கின்றனர்.சமீப நாட்களாக மாநகர பேருந்துகள் காலை நேரங்களில் ஊத்துக்கோட்டைக்கு கால தாமதமாக வந்து செல்வதாக பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். நேற்று காலை, 7:00 மணிக்கு வர வேண்டிய பேருந்துகள் அரை மணி நேரம் தாமதமாக வந்தது. ஒன்றின் பின் ஒன்றாக மூன்று பேருந்துகள் வந்ததால் ஆத்திரமடைந்த பயணியர் பேருந்துகளை முற்றுகையிட்டனர். பின் பயணியர் பாடியநல்லுார் மாநகர பேருந்து கிளை மேலாளரிடம் மொபைல் போனில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர். அவர் இனி பேருந்துகள் தாமதம் இன்றி செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதை தொடர்ந்து பயணியர் மாநகர பேருந்தில் ஏறி சென்றனர்.