பேட்டரி வாகனங்கள் வழங்க துாய்மை பணியாளர் காத்திருப்பு
திருவாலங்காடு, கிராம பகுதிகளில் துாய்மை பாரத திட்டத்தின் கீழ், வீடுகள்தோறும் துாய்மை பணியாளர்கள் குப்பை கழிவுகளை அகற்றி வருகின்றனர். இப்பணிகளை மேற்கொள்வதற்கு, மாநில அரசின் சார்பில் பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டன.திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்டு 42 ஊராட்சிகள் உள்ளன. கடந்த 2022- - 23ம் நிதியாண்டில் சின்னம்மாபேட்டை, திருவாலங்காடு உள்ளிட்ட சில ஊராட்சிகளுக்கு மட்டுமே, இந்த வாகனங்கள் வழங்கப்பட்டன.தொடர்ந்து, 15வது மானிய குழு நிதி ஒதுக்கீட்டில், 2023 - -24ம் ஆண்டில் பூனிமாங்காடு, கனகம்மாசத்திரம் உட்பட ஒன்பது ஊராட்சிகளுக்கு பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டன.குப்பையை சேகரித்து அப்புறப்படுத்துவதற்கு, இந்த வாகனங்கள் துாய்மை பணியாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. தள்ளுவண்டிகளை எடுத்து செல்வதற்கும், குப்பை சேகரிப்பதற்கும் பணியாளர்கள் கடும் சிரமப்படுகின்றனர்.தற்போது துாய்மை பணியாளர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருப்பதால், இந்த வண்டிகளை குடியிருப்புகளுக்கு தள்ளி செல்வதற்கு நீண்ட நேரமாகிறது.எனவே, விடுபட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும், பேட்டரி வாகனங்கள் வழங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, துாய்மை பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.