ரூ.77 லட்சம் கையாடல் துணிக்கடை ஊழியர் கைது
ஆவடி:பணிபுரிந்த துணிக்கடையில் 77 லட்சம் ரூபாய் கையாடல் செய்த ஊழியர் கைது செய்யப்பட்டார். அம்பத்துார், சோழபுரத்தைச் சேர்ந்தவர் ஜமால் முகமது, 58. இவர், 20 ஆண்டுகளாக அயப்பாக்கம் - திருவேற்காடு சாலையில் 'சுமங்கலி டெக்ஸ்டைல்ஸ் அண்ட் ரெடிமேட்' என்ற பெயரில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில், எட்டு ஆண்டுகளாக அயப்பாக்கத்தைச் சேர்ந்த சகுபர் சாதிக், 48, என்பவர் பணிபுரிந்து வந்தார். கடந்த 2018ல், ஜமால் முகமதுக்கு உடல்நலக் குறைவு ஏற்படவே, சகுபர் சாதிக் வியாபாரத்தை கவனித்து வந்துள்ளார். ஜமால் முகமது கடைக்கு வராததை தனக்கு சாதமாக்கி கொண்ட சகுபர் சாதிக், துவக்க நாட்களில் லாபத்தை தன் வங்கி கணக்கிற்கும் மனைவி சக்ர பானு வங்கி கணக்கிற்கும் அனுப்பி வந்துள்ளார். கடை உரிமையாளர் ஜமால் முகமதுக்கு உடல் நிலை சரி இல்லாததால், கடையை தொடர்ந்து நடத்த முடியாது எனக்கூறி, கடைக்கு கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் தொகையில் கடை வாடகையை கழித்து வந்துள்ளார். அதன் பின், தன் 'ஆன்லைன்' பணப்பரிமாற்ற செயலி எண்ணான 'ஜிபே' எண்ணை கொடுத்து, வாடிக்கையாளர்களிடம் பணத்தை செலுத்துமாறு சகுபர் சாதிக் கூறியுள்ளார். இந்த நிலையில், நிறுவனத்தின் வங்கி கணக்கில் சில மாதங்களாக பணப்பரிவர்த்தனை நடக்கவில்லை என்பதை அறிந்த ஜமால் முகமது, 2022ல் கடைக்கு சென்று, வரவு - செலவு கணக்கை தணிக்கை செய்துள்ளார். அப்போது, 2018 முதல் 2022ம் ஆண்டு வரை 77 லட்சம் ரூபாய், சகுபர் சாதிக் கையாடல் செய்தது தெரிய வந்தது. இது குறித்து, கடந்த மே மாதம் ஆவடி போலீஸ் கமிஷனரக மத்திய குற்றப்பிரிவில் ஜமால் முகமது புகார் அளித்தார். புகாரை விசாரித்த இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையிலான தனிப்படை போலீசார், தலைமறைவாக இருந்த சகுபர் சாதிக்கை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.