நடைபாதை வரை விற்பனை செய்வதை ஒழுங்குபடுத்த கலெக்டர் உத்தரவு
திருவள்ளூர்:திருவள்ளூர் பேருந்து நிலையத்தினை சுத்தமாக பராமரிக்குமாறு, நகராட்சி அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.திருவள்ளூர் பேருந்து நிலையத்தில், கலெக்டர் பிரதாப் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதி, கழிப்பறை உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.பேருந்து நிலையத்தில் கடைகள் நடத்த ஒப்பந்தம் எடுத்தவர்கள், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பகுதியிலிருந்து நகர்த்தி நடைபாதை வரை வைத்து விற்பனை செய்வதை ஒழுங்குபடுத்த நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்களின் தரம், காலாவதி தேதி ஆகியவற்றினை உணவு பாதுகாப்பு அலுவலர் கொண்டு ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தினார்.கால்வாய்க்கு செல்லும் மழைநீர் வடிகால்வாயில் குப்பை மற்றும் தண்ணீர் தேங்குவதை சீரமைக்க வேண்டும். உணவகத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பொது கால்வாய்களில் விடுவதை தவிர்த்து, பாதாளச் சாக்கடைகளில் இணைக்க வேண்டும் எனவும், வலியுறுத்தினார்.பேருந்துகள் சரியான இடைவெளியில் இயக்கப்படுகிறதா என, போக்குவரத்து ஊழியர்களிடம் கேட்டறிந்தார். குப்பையை திறந்தவெளிகளில் போடுவது தவிர்க்கும் வகையில் பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் குப்பைத் தொட்டி அமைக்க வேண்டும்.கழிப்பறையில் உள்ள சாய்வு தளத்தினை சீரமைக்க வேண்டும். பேருந்து நிலையத்தினை சுத்தமாக பராமரிக்க வேண்டும் எனவும், நகராட்சி அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.உடன், திருவள்ளுர் போக்குவரத்து மண்டல பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன், நகராட்சி சுகாதார அலுவலர் மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.