ஆலை கழிவுநீர் குட்டையில் கலப்பு நிலத்தடி நீர் மாசுபடுவதாக புகார்
திருவள்ளூர்:தொழுதாவூர் கிராமத்தில் ஆலை கழிவுநீர், கிராம குட்டையில் கலப்பதால் நிலத்தடி நீர் மாசுபடுவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளதாக, கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.திருவாலங்காடு ஒன்றியம் தொழுதாவூர் கிராமத்தில், 'இந்திரா அண்டு கோ' எனும் தொழிற்சாலை, 2019ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.டீசல் வாகனங்களில் உள்ள நச்சு வாயுக்களை குறைக்க பயன்படும் ஆயிலான, 'ஆட்புளூ' இந்த ஆலையில் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.இந்த ஆயிலை தயாரிக்க சில ரசாயன மூலப்பொருட்கள் பயன்படுத்துவதும், அவை அருகே உள்ள கிராமத்திக்கு சொந்தமான குட்டையில் கலப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக கலெக்டரிடம், அப்பகுதியைச் சேர்ந்த ருக்குமணி என்பவர் மனு அளித்துள்ளார்.அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது:வீட்டின் அருகே செயல்படும், 'இந்திரா அண்டு கோ' கம்பெனியில் ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டு ஆயில் தயாரிக்கப்படுகிறது. தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குட்டையில் கலப்பதால் மாசடைந்துள்ளது.இந்த குட்டையருகே குடியிருப்பு, பள்ளிக்கூடம், அங்கன்வாடி, அரசு அலுவலகம் உள்ளன. இதனால், குழந்தைகளுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, உயரதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.