ஜி.என்.டி., சாலையில் தொடரும் ஆக்கிரமிப்பு கடைகளால் அவதி
கும்மிடிப்பூண்டி:ஜி.என்.டி., சாலையில் தொடரும் ஆக்கிரமிப்பு கடைகளால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி அமைந்துள்ள ஜி.என்.டி., சாலையில், கடும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக சாலையோர ஆக்கிரமிப்புகளை, கடந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி, மாநில நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர். வாழ்வாதாரம் இழந்த, 150க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள், நிரந்தர இடம் கேட்டு அரசிடம் முறையிட்டனர்.அதன்படி , கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில், பஸ் நிலைய வளாகத்தில், 40 சென்ட் பரப்பளவு இடம் ஒதுக்கப்பட்டது. ஒதுக்கிய இடத்தில், 60 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் தரை மற்றும் கூரை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.அந்த இடத்தில், 6 அடிக்கு 5 அடி அளவில், 180 கடைகள், 8 அடிக்கு 6 அடி அளவில், 17 கடைகள் என மொத்தம், 197 கடைகளுக்கான இடம் ஒதுக்கப்பட்டது. கட்டுமான பணிகள் முடிந்து, நான்கு மாதங்களாகியும் சாலையோர வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கப்படாமல் உள்ளது.இடம் ஒதுக்கும் வரை, வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க ஜி.என்.டி., சாலையில் எல்லை நிர்ணயம் செய்து சாலையோர கடைகளுக்கு இடம் வழங்கப்பட்டது. நாளடைவில், சாலையோர கடைகளின் ஆதிக்கம் அதிகரித்து பழையபடி சாலையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். இதனால் மீண்டும் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் விரைந்து செயல்பட்டு, உடனடியாக சாலையோர கடைகளுக்கான இடத்தை ஒதுக்க வேண்டும். அதன் வாயிலாக கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.