ஆரணி பேரூராட்சி நிர்வாகம் மீது கவுன்சிலர்கள் அதிருப்தி
ஆரணி:ஆரணி பேரூராட்சி கூட்டம், தலைவர் ராஜேஸ்வரி தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் அபூபெக்கர் முன்னிலை வகித்தார்.காலை, 11:00 மணிக்கு கூட்டம் துவங்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், சற்று தாமதாக கவுன்சிலர்கள் சிலர் வந்தனர். கூட்டம் முடிந்ததாக தெரிவித்து திருப்பி அனுப்பட்டதாக கூறப்படுகிறது.இது குறித்து, தி.மு.க., கவுன்சிலர்கள் ரகுமான்கான், பொன்னரசி ஆகியோர் கூறியதாவது:ஆரணி பேரூராட்சியில் ஏராளமான குளறுபடிகள் நடக்கின்றன. தமிழக அரசு ஒதுக்கும் நிதியை, போலியாக பில் போட்டு பணத்தை எடுத்துக் கொள்கின்றனர். அவர்களுக்கு சாதகமாக கவுன்சிலர்கள் சிலரை மாற்றிவிட்டனர்.செயல்படாத செயல் அலுவலரால், ஆரணி பேரூராட்சி மக்களின் தேவைகள் பூர்த்தி செய்ய முடிவதில்லை. தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து, ஆரணி பேரூராட்சியில் உரிய ஆய்வு மேற்கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு தி.மு.க., கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.