கும்மிடியில் சுகாதார சீர்கேடு கவுன்சிலர்கள் அதிருப்தி
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பேரூராட்சி கூட்டம், தலைவர் சகிலா தலைமையில் நேற்று நடந்தது. செயல் அலுவலர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். வரவு - செலவு, பிறப்பு, இறப்பு, வரி வசூல், நிலுவை, அனுமதி, திட்டங்கள் உட்பட, 25 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.தொடர்ந்து கவுன்சிலர்கள் சிலர் கோரிக்கைகளை முன் வைத்தனர்.ரவி - அ.தி.மு.க.: கும்மிடிப்பூண்டி நகர் பகுதியை கழிவுநீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக, நீதிமன்றம் அருகே தேங்கியுள்ள கழிவுநீரால், குடியிருப்புவாசிகள் கடும் சிரமத்துடன் வசித்து வருகின்றனர். மேலும், நிலத்தடி நீர் மாசடைந்து, சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது.மூன்று ஆண்டுகளாக தீர்வு காண வலியுறுத்தி வருகிறோம். ஆனால் பேரூராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.குப்பன் - தி.மு.க.: கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட புறவழிச்சாலையில், ரயில்வே பாதையோரம் இறைச்சி மற்றும் இதர கழிவுகள் குவிக்கப்பட்டு வருகின்றன. இதனால், ரயில் பாதையின் மறுபுறம் வசிக்கும் வெட்டு காலனி பகுதிவாசிகள் துர்நாற்றத்தில் தவித்து வருகின்றனர். உடனடியாக, அந்த கழிவுகளை அகற்ற வேண்டும். சுகாதாரமான வசிப்பிடத்தை ஏற்படுத்த வேண்டும்.கவுன்சிலர்களின் கோரிக்கைகள் மீது, 'உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்' என, செயல் அலுவலர் பாஸ்கரன் தெரிவித்தார்.