சேதமடைந்த திருவள்ளூர் - மணவாள நகர் பாலம்
திருவள்ளூர், திருவள்ளூர் - மணவாள நகரை இணைக்கும் வகையில், கூவம் ஆற்றில் கட்டப்பட்ட பாலம் சேதமடைந்துள்ளது.சென்னை, பூந்தமல்லி, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து அனைத்து வாகனங்களும் மணவாள நகர் வழியாக திருவள்ளூர் வருகின்றன. இதற்காக, திருவள்ளூரை இணைக்கும் வகையில், மணவாள நகர் - பெரியகுப்பம் கூவம் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளது.பாலத்தின் இருபுறமும் பாதசாரிகள் நடப்பதற்காக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. பகுதிவாசிகள் தினமும் இந்த நடைபாதை வழியாக நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது பெய்த தொடர் மழையால், பால சாலை ஆங்காங்கே சேதமடைந்து, இரும்பு கம்பிகள் வெளியில் தெரிகின்றன.மேலும், பால சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். பக்கவாட்டு சுவரில், அரச மரச்செடிகள் வளர்ந்துள்ளதால், பாலத்தின் உறுதித்தன்மை வலுவிழக்கும் அபாயம் உள்ளது. தவிர, பாலத்தின் இருபுறமும் உள்ள நடைபாதையில் உள்ள 'சிமென்ட் சிலாப்' ஆங்காங்கே உடைந்துள்ளதால், நடந்து செல்வோர் கடும் அவதிப்படுகின்றனர்.எனவே, நெடுஞ்சாலை துறையினர் சேதமடைந்த பாலம், நடைபாதையை சீரமைத்து, பக்கவாட்டில் வளர்ந்துள்ள அரச மரக்செடிகளை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.