கும்மிடி சிப்காட் சாலையோர மணல் குவியலால் அபாயம்
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி சிப்காட் பிரதான சாலையோரம் குவிந்திருக்கும் மணலால், வாகன ஓட்டிகள் விபத்து அபாயத்தில் சென்று வருகின்றனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் சிட்கோ வளாகத்தில், 220 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அனைத்து தொழிற்சாலைகளையும் இணைக்கும் முக்கிய சாலையாக, சிப்காட் பிரதான சாலை உள்ளது. சிப்காட் வளாகத்தில், முறையான பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால், பிரதான சாலையோரம் மணல் குவிந்துள்ளது. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்லும் தொழிலாளர்கள், அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். இந்த மணல் குவியலால், வாகனங்கள் சறுக்கி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். வாகன ஓட்டிகள் நலன் கருதி, சாலையில் குவிந்துள்ள மணலை அகற்ற, கும்மிடிப்பூண்டி சிப்காட் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.