அபாயகரமான கம்பிகள் பூந்தமல்லியில் அச்சம்
பூந்தமல்லி:பூந்தமல்லி நகராட்சி 19வது வார்டில் எல்.கே.பி., நகர், தனலட்சுமி நகர், பத்மாவதி நகரில் மழைநீர் வடிகால்வாய் ஐந்து மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்டது. ஒரு சாலையில் இருந்து மற்றொரு சாலையில் கால்வாய்கள் முறையாக இணைக்கப்படவில்லை. இதனால், மழைநீர் செல்ல வழியில்லாமல் கழிவுநீர் கலந்து தேங்கி நிற்கிறது.மேலும், ஒவ்வொரு சாலையிலும் கால்வாய் முடியும் இடத்தில், பணிகள் அரைகுறையாக விடப்பட்டுள்ளன. கட்டுமான கம்பிகள் சாலையோரம் ஆங்காங்கே அபாயகரமாக நீட்டிக் கொண்டு இருப்பதால், இந்த வழியே இருசக்கர வாகனத்தில் செல்லும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. எனவே, இவற்றை நகராட்சி நிர்வாகத்தினர் விரைந்து சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.