திருவள்ளூரில் இடையூறு ஏற்படுத்தும் 44 நாய்களுக்கு கு.க., செய்ய முடிவு
திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சியில், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்த, 44 நாய்களை நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர். திருவள்ளூர் நகராட்சியில், 27 வார்டுகளில், 450க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில், 9,500க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றி வருகின்றன. தெரு நாய்கள், சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ - மாணவியர் மற்றும் மக்களை துரத்தி பிடித்து, கடிக்கின்றன. இதனால், தெருக்களில் செல்ல பொது மக்களும், மாணவ - மாணவியரும் அச்சமடைந்து வருகின்றனர். இதுகுறித்து, தொடர்ந்து மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் மனு அளித்தனர். இதையடுத்து, கடந்த இரண்டு நாட்களாக திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் உள்ள, தெரு நாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். எம்.ஜி.ஆர்., நகர், ராஜாஜிபுரம், பத்மாவதி நகர், கலெக்டர் அலுவலக வளாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரிந்த, 44 நாய்களை, நாய் பிடிக்கும் ஊழியர்கள் பிடித்து, நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு, பிடிபட்ட நாய்களுக்கு, கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது. ஒரு வாரம் கழித்து, மீண்டும் அதே பகுதியில் விடப்படும் என, நகராட்சி அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.